'எடப்பாடி பழனிசாமியின் ஈரோட்டு தளபதி - அதிமுக பிரச்சார திட்டத்தை வகுத்த மாஸ்டர்' தேர்தல் களத்தை தெறிக்கவிட்ட செங்கோட்டையன்..!
’பிரச்சார வியூகம் வகுப்பதில் பழம் தின்று கொட்டை போட்டவரான கே.ஏ.செங்கோட்டையன் வகுத்த உத்தி, திமுகவினரின் பிரச்சாரத்திற்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது’
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டதும், அவருக்கு தேர்தல் பணி செய்ய 11 அமைச்சர்கள் உள்பட 31 பேர் கொண்ட பெரும் படையை களமிறக்கினார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அதே நேரத்தில் இரட்டை இலை கிடைக்குமா கிடைக்காதா என தெரியாமல், வேட்பாளர் யார் என்பதை கூட அறிவிக்க முடியாமல் குழப்ப நிலையில் இருந்த எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோரை தேர்தல் பணிக்குழுவாக அறிவித்து அதிரடி காட்டினார்.
எடப்பாடி போட்ட கண்டிஷன் - சினம் கொண்ட சிங்கமாக சீற உத்தரவு
ஈரோடு கிழக்கில் நானே பிரச்சாரத்திற்கு சென்றாலும் செங்கோட்டையன் சொல்வதை தான் கேட்டு நடப்பேன், மற்றவர்களும் அவர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு, தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அத்தனை நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ முதலில் சண்டை செய்ய வேண்டும் என்பது மாதிரி, மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா ? சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்ற எம்.ஜி.ஆரின் திரைப்பட வசனம் மாதிரி அத்தனை நிர்வாகிகளும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் இது என் தலைமைக்கு விடப்பட்டுள்ள சவால், என் தலைமையை ஏற்றுள்ள உங்களுக்கும்தான் எனவும் ஈரோடு கிழக்கில் 8 மணி நேரம் நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்ஜித்து, நிர்வாகிகளின் நரம்பு புடைக்க பேசினார் எடப்பாடி.
ஜெயலலிதாவிற்கு பிரச்சாரத் திட்டம் வகுத்தவர்
ஈரோடு கிழக்கின் தேர்தல் வியூகம், பிரச்சார உத்தி என அத்தனையையுமே பார்த்துக்கொண்டார் பணிக்குழு தலைவர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிசாமி நினைத்திருந்தால் எஸ்.பி. வேலுமணியையோ, தங்கமணியையோ பணிக்குழுத் தலைவராக போட்டிருக்க முடியும். அப்படி போட்டிருந்தாலும் கூட செங்கோட்டையன் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும், செங்கோட்டையன் பிரச்சார திட்டத்தை வகுப்பதில் மாஸ்டர் என்று. அதனால்தான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அனுபவசாலியான செங்கோட்டையனையே தேர்தல் பணிக்குழு தலைவராக போட்டார் எடப்பாடி
மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 1991ஆம் ஆண்டு தேர்தலில் எங்கு, எப்படி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொடுத்தவர் செங்கோட்டையன், அவருக்கு பேனா, பேப்பர் இருக்க வேண்டும் என்பது இல்லை. தரையில் அமர்ந்து வெறும் மண்ணிலேயே ஒரு வரைபடத்தை வரைவார், பிரச்சார திட்டத்தை தீட்டுவார் என்கின்றனர் அதிமுகவினர். எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ பதவிக்கு சீட் வாங்குவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்னரே 1977ல் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ ஆனாவர் கே.ஏ.செங்கோட்டையன்.
தேர்தல் வியூத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்
அதன்பிறகு 2021ஆம் ஆண்டு தேர்தல் வரை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 8 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார். ஈரோடு மாவட்டம் அவருக்கு அத்துப்படி. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னமே கிடைக்கவில்லையென்றாலும் கூட அங்கு போட்டியிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ததற்கு முக்கிய காரணம் செங்கோட்டையன்தான்.
அப்படி தேர்தல் அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்டவராக உள்ள செங்கோட்டையனின் தேர்தல் பிரச்சார உத்தியில் ஆளுங்கட்சியான திமுகவினரே சற்று திணறித்தான் போயிருக்கிறார்கள் என்கின்றனர் களத்தில் இருப்பவர்கள். அவரின் பிரச்சார வியூகத்தில் மிக முக்கியமானது ‘டோர் டு டோர் கேம்பெய்ன்’. ஒவ்வொரு வீடாக வேட்பாளர் தென்னரசுவையும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினரையும் ஏறி, இறங்க வைத்து வாக்கு வேட்டை நடத்தியிருக்கிறார் அவர்.
திமுக பிரச்சாரத்திற்கு நெருக்கடி கொடுத்த உத்தி
அதிமுகவினர் பிரச்சாரத்திற்கு செல்லும்போது அங்கு மக்கள் இருக்கக் கூடாது என்று நினைத்து, அவர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் கூட்டிச் சென்று அமர வைத்ததும், சுற்றுலா என்ற பெயரில் மேட்டூர் டாம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றதும் செங்கோட்டையன் வகுத்த தேர்தல் உத்தி பலிக்கக்கூடாது என்பதற்காகதான் என்கின்றனர் அக்கட்சியினர். ஆனால், அவற்றையெல்லாம் மீறி, ஆட்சி, அதிகாரமிக்க ஆளுங்கட்சியான திமுகவின் பிரச்சார உத்திக்கு கடும் நெருங்கடி கொடுக்கும் விதத்தில் அதிமுக தேர்தல் பிரச்சாரமும் அமைந்திருக்கிறது என்கிறனர் அரசியல் பார்வையாளர்கள்.
வெற்றியோ தோல்வியோ அதிமுக வேட்பாளர் தென்னரசு பெறப்போகும் வாக்குகளில் தெரிந்துவிடும். செங்கோட்டையனின் பழுத்த அனுபவம் பயன் அளித்ததா? இல்லை, புளித்துப்போனதா என்று!