(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Breakfast Scheme: முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறவாவது பள்ளிகள் அமைக்குமா தமிழ்நாடு அரசு? வலுக்கும் கோரிக்கை!
காலை உணவுத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 ஆயிரத்து எட்டு அரசு மற்றும் அரசு உதவு பெறும் துவக்கப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 17 லட்சம் பள்ளிக்குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் தற்போது பேசு பொருளாக உள்ள செய்தி பள்ளிக்குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பற்றியது தான். செய்தித் தாள்கள் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை இந்த திட்டம் தொடர்பான பதிவுகள்தான். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 ஆயிரத்து எட்டு அரசு மற்றும் அரசு உதவு பெறும் துவக்கப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 17 லட்சம் பள்ளிக்குழந்தைகள் பயன் பெறுகின்றனர். இவர்களுக்கான உணவு தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் சமைக்கப்படுகிறது. இந்த திட்டம் திமுக ஆட்சியில் என்றைக்கும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. மாநகர் துவங்கி கிராமம் வரை விரிவு படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தை அரசு முழு வீச்சில் செயல்படுத்தும் என்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் உலாவுகிறது.
குறிப்பாக இந்த திட்டம் கிராமப்புற குழந்தைகளுக்கு பயனளிக்ககூடியதாக இருக்கும். அதேபோலத்தான் நகரபுற குழந்தைகளுக்கும். நகர் புறத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கு இந்த திட்டம் பயனளித்தாலும் குழந்தைகளை முழுமையாக சென்று சேருமா என்ற கேள்வியை எழுப்பவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தலைநகர் சென்னை துவக்கத்தில் இருந்து இப்போது வரை சென்னை, சிங்காரச் சென்னை, பெருநகர் சென்னை, சிங்காரச் சென்னை 2.O போன்ற திட்டங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகளின் போது சென்னையில் வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்களை புது பெரும்பாக்கம் மற்றும் பழைய பெரும்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு கடந்த கால மாநில அரசுகள் கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளன. கிட்டத்தட்ட 40 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் அம்மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்பதை கள நிலவரங்களும் உணர்த்தாமல் இல்லை.
பறக்கும் ரயில் திட்டம் துவங்கப்பட்ட காலத்தில் தொடங்கப்பட்டது தான் மக்களை கட்டாயமாக அப்புறப்படுத்தும் செயல். அன்று துவங்கி இன்று வரை 45 ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் மேற்குறிப்பிட்ட சென்னையில் இருந்து 30 முதல் 40 கிலோ மீட்டர் நகரத்திற்கு அப்பால் அமைக்கப்பட்ட குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிறுப்பு வாரியங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அரசு செய்து கொடுத்தது தீப்பெட்டிகள் போல அடுக்கப்பட்ட கட்டிடங்கள் மட்டும் தான். அதன் பின்னர் அந்த பகுதியை சென்னையுடன் இணைக்க அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் நூற்றுக்கணக்கான போராட்டங்களுக்கும், மனுக்களுக்கும் பின்னர்தான்.
ஆனால் அப்படி இருந்த போதும் இன்றுவரை அந்த பகுதிக்கு போதுமான பள்ளிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் இசையரசு கூறுகையில், “40 ஆயிரம் குடும்பங்களை கணக்கில் கொண்டு ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை வீதம் கணக்கிட்டால் மொத்தம் 40 ஆயிரம் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த 40 ஆயிரம் குழந்தைகளின் அடிப்படைக் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அப்பகுதியில் பள்ளிகள் உள்ளனவா என்றால் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மையாக உள்ளது.
40 ஆயிரம் குழந்தைகளில் 10 ஆயிரம் குழந்தைகள் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் வயதினை உடையவர்கள் எனவும், 10 ஆயிரம் குழந்தைகள் 6 முதல் 10ஆம் வகுப்பு வரையும் 10 ஆயிரம் குழந்தைகள் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையும் படிக்கிறார்கள் எனவும் மீதம் உள்ள 10 ஆயிரம் குழந்தைகள் 5வயதுகுட்பட்டவர்களாகவும் அதில் 5 ஆயிரம் குழந்தைகள் அங்கன்வாடிக்குச் செல்லும் வயதுடையவர்களாக இருக்கிறார்கள் என நாமாக ஒரு தோராயக்கணக்கு போட்டால் கூட இந்த குழந்தைகளின் அங்கன்வாடி துவங்கி உயர்நிலைக் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளிகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டித்தான் ஆகவேண்டும். பொதுவாகவே மேல்நிலைப்பள்ளி அதாவது 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு சுமார் ஆயிரம் முதல் 1,500வரை மாணவர்கள் கல்வி பயில்வார்கள். அப்படி இருக்கும்போது நமது தோராயக் கணக்கு 20 ஆயிரம் மாண்வர்களை உள்ள இந்த பகுதிக்கு அரசு கட்டியிருக்கவேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டுவிடுகிறேன். அதேபோல் தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடிகளைக் கணக்கில் கொண்டால் அரசு அப்பகுதி மக்களுக்கு கட்டமைத்து தந்திருக்க வேண்டிய தொடக்கப்பள்ளியும் அங்கன்வாடியும் போதுமான அளவு கட்டாதது அம்மக்களின் அடிப்படை உரிமையை சிதைக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு தானே ஆகவேண்டும்.
வீட்டுக்கு அருகில் போதுமான அளவிலான பள்ளிகளும் ஆசிரியர்களும் இல்லாததால், மாணவர்கள் பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இதனால் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் ஆண் குழந்தைகள் Child Labour எனப்படும் குழந்தைத் தொழிலாளராக மாறிவிடுகிறார்கள். பெண் குழந்தைகளின் நிலை இதனைவிட மோசமானது. அதாவது பாதியில் பள்ளிப்படிப்பை கைவிட்ட பெண் குழந்தைகளுக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைத்துவிடும் நிலை அங்கு சகஜமாகிவிட்டது. இது மட்டும் இல்லாமல், பள்ளிக் கல்விக்காக 30 முதல் 40 கிலோ மீட்டர் பயணம் செய்து சென்னை நகருக்கு வந்து செல்லும் பெண் குழந்தைகளின் குடும்பத்தினர் பெண் குழந்தையை உடலாக கருதுவதால் அச்சத்திற்கு ஆளாகின்றனர். இதனாலே சில பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குடும்பத்தினரே தடுக்கின்றனர்.
இப்படி கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் இந்த பகுதி குழந்தைகளுக்கு தற்போது கொண்டுவரப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எட்டுவதற்காகவாவது தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களில் கட்டாயமாக குடியமர்த்தப்பட்ட அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்வித்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளிகளை அமைத்தால், அடிப்படைக் கல்வியை எட்ட அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் 30 முதல் 40 கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டி இருக்காது” எனத் தெரிவித்தார்.
இப்படியான நிலையில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் இப்பகுதி மக்கள் பயன் அடையும் வகையில் பள்ளிகளை அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு விரைவில் துவங்கினால் வரலாறு பாராட்டும்.