NTK Issue: பெரியார் குறித்து அவதூறு பேச்சு... சீமான் மீது அதிருப்தி.. நாதக சேலம் மாவட்ட நிர்வாகிகள் விலகல்...
NTK Party : நாம் தமிழர் கட்சியிலிருந்து சேலம் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன் உட்பட 100 பேர் விலகுவதாக முகநூலில் பதிவு.

நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மையில் பல்வேறு நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். ஏற்கனவே சில மாதத்திற்கு முன் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் என்கிற தங்கதுரை, வீர தமிழர் முன்னணி என்ற பிரிவின் சேலம் மாவட்ட செயலாளர் வைரம், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணைத்தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் விலகினர்.
இதையும் படிங்க: பெரியார் என்ன புரட்சி செய்தார்? தயாரா? - சவாலுக்கு கூப்பிடும் சீமான்!
கட்சியிலிருந்து விலகல்:
இந்த நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் அழகரசன் தனது முகநூல் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் தன்னுடன் சேலம் மாநகர் மாவட்ட வணிகர் பாசறை இணை செயலாளர் வசந்த குமார், சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன், ஓமலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

காரணம் என்ன?
இதுகுறித்து அழகரசனிடம் கேட்டபோது, சமீபத்தில் பெரியாரை அவமதிக்கும் விதமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது ஏற்கக் கூடியதாக இல்லை என்றும் இதனால் கட்சியில் பலருக்கும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்சியிலிருந்து விலகியதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
மேலும் ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் விலகிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகி வருவதாக தெரிவித்தார். மேலும் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் சீமானின் பேச்சு உள்ளிட்டவற்றால் அதிர்ப்தியில் நிர்வாகிகள் உள்ளதால் விரைவில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் என்பவரும் விலக உள்ளதாக குறிப்பிட்டார்.





















