‛ஜானகியை சந்தித்தேன்... அதிமுக ஒன்றுபட்டது’ -சசிகலா பரபரப்பு பேட்டி!
இப்போது சந்திப்பதினால் எந்த அர்த்தமும் இல்லை, காலம் கடந்து விட்டது. நீதிமன்றத்தில் மூலம் நாம் இரட்டை இலையை மீட்டுக் கொள்ளலாம் என்று அக்கா தெரிவித்து விட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா சில தினங்களுக்கு முன்பு பிரபல தமிழ் செய்தி சேனலுக்கு நேர்காணல் அளித்திருந்தார். இதில், 1987இல் பிளவுபட்ட அதிமுக மீண்டும் எப்படி ஒன்றிணைக்கப்பட்டது என்ற கேள்வியை சசிகலாவிடம் நிருபர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த சசிகலா, ஜானகி அணியினருடன் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ததில் தற்போதைய திமுக அமைச்சரவையில் உள்ள இரண்டு அமைச்சர்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர். ஜானகியம்மா என்னை சந்திக்க விருப்பப்படுவதாக என் கணவர் நடராஜன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, "கட்சியை இணைப்பு தொடர்பாக ஜானகியம்மா என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் நேரில் சென்று பார்த்துவிட்டு வருகிறேன்" என்று ஒப்புதல் கேட்டேன். முதலில், அக்கா அனுமதியளிக்கவில்லை. அப்போது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்போது சந்திப்பதினால் எந்த அர்த்தமும் இல்லை, காலம் கடந்து விட்டது. நீதிமன்றத்தில் மூலம் நாம் இரட்டை இலையை மீட்டுக் கொள்ளலாம் என்று அக்கா தெரிவித்து விட்டார். இருப்பினும், நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினேன். நான் சந்திப்பதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இயல்பான சந்திப்பாக இருக்கும் என்று சசிகாலா பதிலளித்துள்ளார்.
மறுநாள் ராமாபுரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அறையில் ஜானகியம்மாவை நேரில் சந்தித்தேன். எங்களுடைய இந்த சந்திப்பில் யாரும் இருக்க கூடாது என்பதில் ஜானகியம்மா மிகவும் கவனமாக இருந்தார்.
என் கணவர் தொடங்கிய இந்த இயக்கம் நல்ல முறையில் தொடர்ந்து இயங்க வேண்டும். என்னால் கட்சி பிரிந்தது என்ற அவப்பெயர் எனக்கு வேண்டாம். பலரின் நிர்பந்தத்தால் நான் அரசியலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. எனது, சொந்த விருப்பத்தின் பேரில் அரசியலுக்கு வரவில்லை. நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். ஜெயலலிதாவைக் கொண்டே இயக்கத்தை நல்லமுறையில் நடத்துங்கள். தலைவர் (எம்.ஜி.ஆர்) பெயரை காப்பாற்றுங்கள், அதுதான் என் விருப்பம்', என்று ஜானகியம்மாள் தன்னிடம் தெரிவித்ததாக சசிகலா நேர்கானலில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சசிகலா, ஜெயலலிதா இருவரும் ஜானகியம்மாவை நேரில் சென்று சந்தித்தனர். கட்சி இணைப்பும் சுமூகமாக முடிந்தது.
ஜெயலலிதாவுடன் எனது வாழ்க்கை : வி.கே சசிகலாவின் நேர்காணல்..!
1987-ல் என்ன நடந்தது?
தமிழக முதல்வராக இருந்த எம். ஜி.ஆர், 1987ம் ஆண்டு டிசம்பர் 24 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது? என்ற சர்ச்சை கட்சிக்குள் எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜிஆர்-ன் மனைவி ஜானகி இராமச்சந்திரன், முதல்வரானார். ஆனால், அதை கட்சியின் செல்வாக்கு பெற்ற மற்றொரு தலைவரான ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர்.
ஜானகி அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தி.மு.க., இந்திரா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும், ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே, சட்டமன்றத்தில் மோதல் ஏற்பட்டது. அவைத் தலைவர், ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அதில், ஜானகி இராமச்சந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக, ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.
அதிமுக இரண்டாகப் பிளவு பட்டது. தேர்தல் ஆணையம் இரு கட்சிகளையும் அதிகாரப்பூர்வமான அதிமுகவாக ஏற்க மறுத்து, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது. அதிமுக (ஜா) அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜே) அணிக்கு சேவல் சின்னமும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் (1989) திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. கட்சிப் பிளவால் அதிமுக இத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இத்தேர்தலுக்குப் பிறகு ஜானகி இராமச்சந்திரன் அரசியலை விட்டு விலகினார். தேர்தல் முடிந்து இருமாதங்களுக்குப் பிறகு ஜெயலிதா- ஜானகி சந்திப்பும், கட்சி இணைப்பும் ஏற்பட்டது.
Sasikala Interview: ஜெயலலிதாவை முதலில் சந்தித்தது எப்போது? - சசிகலா பகிர்ந்த நினைவுகள்..!