Ramadoss PMK: முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் வகையில் மாம்பழம் சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்கி தரும்படி தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியை தொடங்கியுள்ளது. திமுக சார்பாக ஓரணியில் தமிழகம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து திமுக அரசின் திட்டங்களை எடுத்துரைத்து வருகிறது. எதிர்கட்சியான அதிமுகவும் தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதே போல தவெகவும் மக்களை சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
ராமதாஸ்- அன்புமணி மோதல்
அதே நேரம் தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக வாக்குகளை கொண்ட கட்சியாக இருந்த பாமக கடந்த சில தேர்தல்களாக மக்களின் ஆதரவை பெற முடியாமல் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பாமக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தந்தை- மகன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தனது பேரன் முகுந்தனை இளைஞர் அணி நிர்வாகியாக ராமதாஸ் அறிவித்தற்கு பாமக பொதுக்குழு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் சமாதான முயற்சிகள் நடைபெற்றாலும் ஒருங்கிணைப்பு ஏற்படாமல் இருந்து வருகிறது.
அடுத்தாக பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அடுத்த சில நாட்களில் கட்சியில் இருந்து நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத அன்புமணி, தன்னை பொதுக்குழு தான் தலைவராக தேர்வு செய்தது எனவும், பொதுக்குழுவிற்கு மட்டுமே தன்னை நீக்க அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார். இதன் காரணமாக பாமகவில் ராமதாஸ்- அன்புமணி என இரு பிரிவாக நிர்வாகிகள் பிரிந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.
மாம்பழம் சின்னத்தை கேட்கும் ராமதாஸ்
இந்த நிலையில் தான் பாமகவின் சின்னமான மாம்பழம் யாருக்கு என கேள்வி எழுந்திருந்த நிலையில், பீகார் தேர்தலில் போட்டியிடும் வகையில் அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தில் மாம்பழம் சின்னம் கோரி விண்ணப்பித்திருந்தது. தேர்தல் ஆணையமும் அன்புமணி தரப்பிற்கு மாம்பழம் சின்னத்தை வழங்கியது. இதற்கு ராமதாஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தங்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.எனவே தேர்தல் ஆணையம் ராமதாஸ் தரப்பிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்குமா.? அல்லது அன்புமணிக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு தரப்பிற்கும் இல்லாமல் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.





















