Rahul Gandhi Disqualified: எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் - தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி
Rahul Gandhi Disqualified: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி(Rahul Gandhi) மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மோடி குடும்பப் பெயர் குறித்து அவர் அவதூறாக பேசிய வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி மக்களவைச் செயலகம் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது மத்திய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கர்நாடகாவின் கோலாரில் நடந்த பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி மோடி குடும்பம் குறித்து பேசியதற்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, இந்தக் கருத்து தொடர்பாக ராகுல்காந்தி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்துவதாக குறிப்பிட்டு அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்க்கில், 2 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டும், 30 நாட்கள் ஜாமீனும் வழங்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின்னர், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. சத்தியமே எனது கடவுள், அகிம்சை அதைப் பெறுவதற்கான வழிமுறை" என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவரது சகோதரி பிரியங்கா காந்தி, “விலைபோன இயந்திரங்கள் அனைத்தும் ராகுல் காந்தியின் குரலை நசுக்க முயல்கின்றன. என் சகோதரன் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்பட மாட்டான். உண்மையைப் பேசி வாழ்ந்தவர், தொடர்ந்து உண்மையைப் பேசுவார். நாட்டு மக்களின் குரலை அவர் தொடர்ந்து எழுப்புவார். உண்மையின் சக்தியும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பும் அவருடன் உள்ளது" என்று இந்தியில் ட்வீட் செய்து இருந்தார்.
நேற்று தீர்ப்பு வந்த நிலையில், இன்று மக்களவைச் செயலகம் கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினர், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றன் தீர்ப்பின் அடிப்படையில், தகுதி நீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.