காரைக்காலுக்கு 188 கோடி..கிடைத்த பம்பர் பரிசு..
காரைக்காலில் ரூ 188.02 கோடி மதிப்பீட்டில் மாபெரும் மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் திறந்து வைத்தார்.

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 188 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு முக்கிய மேம்பாட்டுப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நிறைவு பெற்ற கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், மற்றும் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திறந்து வைக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட முக்கிய திட்டங்கள்
நிகழ்ச்சிகளில், காரைக்கால் மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு முக்கிய திட்டங்கள் பொதுப்பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன.
திறந்து வைக்கப்பட்ட திட்டங்கள்
* ராஜாத்தி நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: காரைக்கால் ராஜாத்தி நகரில் ரூபாய் 48 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
* திருநள்ளாறு திருமண மண்டபம்: திருநள்ளாறு கீழவூரில் ரூபாய் 58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருமண மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் மேம்பாட்டுப் பணிகள்
* மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி: பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 74 கோடியே 12 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி திட்டமானது அமைத்தல்.
உட்புற சாலைகள் மேம்பாடு:
காரைக்கால் வடக்கு தொகுதிக்குட்பட்ட தல தெரு, கே.எம்.ஜி நகர், ஆர்.பி நகர், ஜி.என்.நகர், காளியம்மன் கோவில் தெரு மற்றும் வள்ளியம்மை நகர் உட்புற சாலைகளை ரூபாய் 14 கோடியே 76 லட்சம் மதிப்பில் மேம்படுத்துதல்.
* காரைக்கால் கீழகசாக்குடியில் உள்ள அம்மையார் நகர் மற்றும் விரிவாக்கம், சாந்தி நகர், அரவிந்த் நகர், ஃபாத்திமா நகர் ஆகியவற்றின் சாலைகளை ரூபாய் 9 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்துதல்.
* நீர்வழிப்பாதை மேம்பாடு: காரைக்கால் வாய்க்கால் (ஜிப்மர் வளம் முதல் காமராஜர் சாலை வரை) ரூபாய் 8 கோடியே 54 லட்சம் மதிப்பில் மேம்படுத்துதல்.
* ஆயுஷ் மருத்துவமனை: காரைக்கால் பொது மருத்துவமனையில் மத்திய அரசின் ஆயுஷ் திட்டத்தின் மூலம் 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை ரூபாய் 8 கோடியே 55 லட்சம் மதிப்பில் கட்டுதல்.
* திருநள்ளாறு கோவில் மேம்பாடு: இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் 'பிரசாத்' திட்டத்தின் கீழ், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு ரூபாய் 20 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் அமைத்தல் மற்றும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில் பயணிகள் இரவு தங்கும் இடம் ரூபாய் 9 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் கட்டுதல்.
முதலமைச்சர், சட்டப்பேரவை தலைவர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ரிப்பன் வெட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்
இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம், திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவா, நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா, நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். நாக தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட உயர் அதிகாரிகளான காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, காரைக்கால் சார்பு ஆட்சியர் பூஜா, புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீர செல்வம், புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குநர் இஸ்மாயில் ஆகியோரும் பங்கேற்றனர்.
அரசுத் துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இந்த நிகழ்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காரைக்கால் மாவட்ட பொதுப் பணித்துறை, மீனவர் நலத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.






















