வாரிய தலைவர் பதவி தராததால் வருத்தத்தில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏக்கள் - சமாதான முயற்சியில் இறங்கிய மேலிடத் தலைமை
இன்று புதுச்சேரிக்கு வரும் மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல், பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் சமரப்பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்
![வாரிய தலைவர் பதவி தராததால் வருத்தத்தில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏக்கள் - சமாதான முயற்சியில் இறங்கிய மேலிடத் தலைமை Puducherry Board Chairman post issue: Speaker and BJP Supporting Independent MLAs meet and hold talks with Governor Tamilisai Saundarajan வாரிய தலைவர் பதவி தராததால் வருத்தத்தில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏக்கள் - சமாதான முயற்சியில் இறங்கிய மேலிடத் தலைமை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/09/8922090ba7d085855c2a68c81b885801_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரியில் சபாநாயகர் மற்றும் பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார்கள். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகிய 3 பேரும் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வந்தனர். அவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்குவதாக பா.ஜ.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் ஆட்சி அமைந்து 9 மாதங்கள் ஆகியும் இதுவரை வாரிய தலைவர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் மூவரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தங்கள் தொகுதியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என்பதால் தங்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்கள்.
புதுச்சேரியில் வாரிய தலைவர்கள் பதவிகேட்டு, பா.ஜ.க., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
இந்த நிலையில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை சமரசப்படுத்த பா.ஜ.க. மேலிடம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதையடுத்து சபாநாயகர் செல்வத்தை சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்தனர். இந்த நிலையில் சபாநாயகர் செல்வம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். அப்போது புதுவையில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசியதாக தெரிகிறது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். ஆனால் அவர்களுடன் அங்காளன் எம்.எல்.ஏ. வரவில்லை. சிறிதுநேரம் அவருக்காக 2 பேரும் காத்திருந்தனர். ஆனால் அவர் வராததால் இருவரும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார்கள்.
அதன்பின் சிவசங்கரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆளுநரிடம் எங்களது தொகுதி பிரச்சினை தொடர்பாக பேசினோம். அவற்றை நிவர்த்தி செய்து தருவதாக ஆளுநரும் கூறியுள்ளார். தொகுதியில் வேறு பிரச்சினைகள் இருந்தாலும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். சபாநாயகரை சந்தித்த பின் எங்களுடன் மத்திய அமைச்சர் தொடர்பு கொண்டு பேசி ஆளுநரை சந்தித்து பேச அறிவுறுத்தினர். அங்காளன் எம்.எல்.ஏ.வும் எங்களுடன் வருவதாக இருந்தது. அவருக்கும் சேர்த்துதான் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஏனோ அவர் வரவில்லை. அவர் எங்களுடன் தான் உள்ளார் என அவர் கூறினார்.
இதற்கிடையே புதுவையில் இன்று மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் புதுச்சேரி வருகின்றனர். பா.ஜ..க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை தொடர்பாக பேசி சமரச முயற்சி எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)