Priyanka Gandhi: பிரியங்கா காந்தியின் எண்ட்ரி: பாஜகவின் டெபாசிட் காலி: வயநாடு மக்களின் பரிசு.!
Priyanka Gandhi- Gandhi: வயநாடு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.
Wayanad Bypoll 2024: வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டுள்ளதால், அந்த தொகுதியின் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாகவே இருந்தது.
தேர்தல்:
இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றன. இத்துடன் பல மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்த்லும் நடைபெற்றது. அதில் முக்கியமான தொகுதியாக கேரளாவின் வயநாடு பார்க்கப்பட்டது. அதற்கு காரணம், நேரு குடும்பத்தின் அங்கமானவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் தங்கையுமான பிரியங்கா காந்தி போட்டியிட்டதுதான் காரணம். மேலும், பிரியங்கா காந்தி முதல்முறையாக நேரடியாக மக்கள் பிரதிநிதி பதவிக்காக போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
களத்திற்குள் வந்த பிரியங்கா:
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு, ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்ததை அடுத்து, வயநாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிட அறிவிப்பு வெளியானது முதல், அத்தொகிதியானது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது என்றே சொல்லலாம்.
4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி:
இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், 6 லட்சத்து 22 ஆயிரத்து 338 வாக்குகள் பெற்றுள்ள பிரியங்கா காந்தி, வெற்றி பெற்றுள்ளார். 4 லட்சத்து 10 ஆயிரத்து 931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தில் சிபிஐ வேட்பாளர் சத்யன் 2,11,407 வாக்குகளை பெற்றிருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 109939 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும், இவர் 5.1 லட்சம் வாக்குகள், பிரியங்கா காந்தியைவிட குறைவாக பெற்றுள்ளார்.
டெபாசிட் இழப்பு:
இந்நிலையில், இவர் டெபாசிட் தொகையை இழந்துள்ளார். இதற்கு , காரணம் பதிவான வாக்குகளில், குறைந்தபட்சம் 6ல் 1 பங்கு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையானது திருப்பி தரப்படமாட்டாது, இழந்ததாக கருதப்படும் . மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை, ரூ. 25,000 டெபாசிட் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரியங்கா போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, பாஜக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்தது பேசு பொருளாக மாறியுள்ளது.