கேப்டன் வாக்குகளை விஜய் பெற நினைக்கிறாரா ? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்
கேப்டனின் வாக்குகளை பெற விஜய் நினைக்கிறார் என்றால் மக்கள் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள்..எங்களுக்கென்று கட்சி உள்ளது. வாரிசு உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

விஜயகாந்த் 73 வது பிறந்த நாள் ;
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும் , நடிகருமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 73 வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25 ம் தேதி ‘ வறுமை ஒழிப்பு தினமாக ’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிக நிறுவனரும் , நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு பிறகு அவரது இரண்டாம் ஆண்டாக பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாளையொட்டி தலைமை கழகத்தில் மருத்துவ முகாம் , ரத்ததான முகாமை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ;
சாலையோர வியாபாரிகளுக்கு சுயதொழில் செய்ய தள்ளு வண்டி , அயன் இயந்திரம் , தையல் இயந்திரம் , இட்லி பாத்திரம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டன.
அதே போல் ராமாபுரம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டு தோறும் வழங்குவது போல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி தமிழ் சங்கத்திற்கு கல்விக்காக 1 இலட்சம் காசோலை வழங்கப்பட்டது.
கல்வி உதவி தொகை வழங்குதல்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட போது விஜய் பிரபாகரனிடம் பவித்ரா என்ற பெண் தன்னுடைய மகள் படிப்பிற்கு கல்வி உதவி தொகை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து படிப்பு செலவு அதை முழுவதும் ஏற்றுக் கொள்வதாக விஜய பிரபாகரன் தெரிவித்தார். இந்த நிலையில் அவருடைய மகள் படிப்பு செலவிற்கு கல்வி உதவித் தொகையை இன்று வழங்கினர். தொடர்ச்சியாக கடலூரில் கடந்தாண்டு கேப்டன் பிறந்தநாளுக்கு கட்டவும் வைக்க சென்ற போது இறந்த வெங்கடேஷ் என்ற தொண்டருடைய குடும்பத்திற்கு இரண்டாவது முறையாக உதவி தொகை வழங்கப்பட்டது
அதன் பின்னர் விஜயகாந்தின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் முரசு புத்தகத்தையும் பிரேமலதா வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் ;
தூய்மை பணியார் இல்லை என்றால் நாடு அசிங்கமாகி விடும். தங்களின் உயிரை பணயம் வைத்து தான் அந்த தொழிலை அவர்கள் செய்கிறார்கள். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது நான் நேரடியாக சென்று அவர்களின் துயரில் பங்கேற்றேன். அவர்களுக்கு ஆறுதலும் சொன்னோம். பணி நிரந்தரம் , பழைய ஊதியம் அந்த இரண்டு மட்டும் தான் அவர்கள் கேட்கிறார்கள்.
ஆனால் அரசு வீடு தருகிறோம் , கல்வி உதவித்தொகை தருகிறோம் , காலை உணவு தருகிறோம் என்று அறிவித்துள்ளனர். அவர்கள் கேட்டது வேறு. ஆனால் அரசு சார்பில் அறிவித்தது வேறு. தூய்மை பணியாளர்கள் நன்றி சொல்வது போல் எல்லாம் செய்திகள் வந்தது. அவர்கள் மாயை உருவாக்கி உள்ளனர். உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோரிக்கை சென்று சேரவில்லை. தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு முதலமைச்சர் செவி சாய்க்க வேண்டும் என்று கேப்டனின் பிறந்தநாளில் கேட்டு கொள்கிறோம்.
தூய்மை பணி - குல தொழிலாக மாறிவிட கூடாது
இது குல தொழிலாக மாறிவிடக் கூடாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. அம்மா அப்பா செய்யும் வேலையை பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. எவ்வளவோ வரி வசூலிக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் என்ன குறைந்து விடப் போகிறது.
கேப்டனும் , எஸ்.ஏ சந்திரசேகரும் 17 படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். விஜய் சின்ன பையனாக இருக்கும் போது இருந்தே கேப்டன் அவரை பார்த்து வந்துள்ளார். உங்களுக்கு வேண்டுமானால் விஜய் என்று சொல்லலாம். விஜய் எங்களுடைய பையன் தான். விஜயபிரபாகரன் , சண்முக பாண்டியன் எப்படியோ அப்படி தான் விஜயும். ஏ.ஐ யில் கேப்டனை பயன்படுத்த கேட்ட பொழுது சரி என்று சொன்னோம். செந்தூர பாண்டியன் படத்திலும் கேப்டன் நடித்து கொடுத்தார். விஜய்க்கு என் வாழ்த்துகள்.
கேப்டன் பெயர் - மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்
கேப்டனின் வாக்குகளை பிடிக்க அவர் அப்படி சொல்கிறாரா ? என்றால் , எங்களுக்கு என்று ஒரு கட்சி இருக்கிறது. எங்கள் கட்சி 20 ஆண்டு கட்சி. எதிர்க் கட்சியாகவும் இருந்து இருக்கிறோம். கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டும் தான். அவர் இடத்தை யார் நினைத்தாலும் பிடிக்க முடியாது. அவர் கேப்டனின் பெயரை சொல்கிறார். கேப்டனின் வாக்குகளை அவர் எடுத்து கொள்கிறார் என்றால் மக்கள் அதை ஏற்றுகொள்ள மாட்டார்கள். கட்சி தொண்டர்களும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். மக்களுக்கு பிரச்சனை என்றால் வேட்டியை மடித்து கட்டி முதல் ஆளாக நிரப்பவர் கேப்டன். கேப்டனை யாருடனும் ஒப்பிடக் கூடாது. அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
டி.வி.கே தரப்பினர் விஜயகாந்தை ரீல்ஸ்களில் வெளியிடுவது குறித்த கேள்விக்கு
எங்கள் தரப்பிலும் ஐ.டி விங் தரப்பு மூலம் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு வாரிசு இருக்கிறது. லட்சக்கணக்கான தொண்டர்களை கேப்டன் உருவாக்கி இருக்கிறார். எனவே வேறு யாரும் கேப்டனை பயன்படுத்துவதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.




















