Anbumani Ramadoss: ராமதாஸ் கதை ஓவர்? பேஸ்மெண்ட்ட ஸ்ட்ராங்கா போட்டாச்சு, போட்றா ஃப்ளைட்ட - பறக்கும் அன்புமணி
PMK Anbumani Ramadoss: பாமகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில், அக்கட்சி தலைவர் அன்புமணி இன்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

PMK Anbumani Ramadoss: பாமகவில் நிர்வாக அதிகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் அன்புமணி கடிதம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
அன்புமணி Vs ராமதாஸ்:
பாமகவில் அதிகாரம் யாருக்கு என்பதற்கான மோதல் தீவிரமடைந்து வருகிறது. நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையேயான கருத்து மோதல் கட்சியினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி இறக்கும்வரை தானே தலைவராக செயல்படுவேன், அன்புமணி எனது தலைமையின் கீழ் செயல்தலைவராக இருக்க வேண்டும் என ராமதாஸ் பேசிவருகிறார். அதேநேரம், பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் தான் கட்சியின் தலைவராக தொடர்வதாக அன்புமணி பேசிவருகிறார். இதனால், பாமக ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரண்டாக பிரிந்துள்ளது.
பேஸ்மெண்ட்ட ஸ்ட்ராங்கா போட்ட அன்புமணி:
அன்புமணிக்கு தலைமை பொறுப்பு இல்லை, பெற்ற தாயையே தாக்கினார், சுயலாபத்துக்காக பாஜக உடன் கூட்டணி அமைத்தார் என ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து வந்தார். ஆனால், அதேகாலகட்டத்தில் அன்புமணி தீவிரமாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வந்தார். பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு தனக்கே இருப்பதை காட்ட முற்பட்டார். இதனை உணர்ந்ததும், அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கிவிட்டு தனக்கு சாதகமான நிர்வாகிகளுக்கு ராமதாஸ் நியமித்தார். அது செல்லாது என அன்புமணியும் எதிர் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த கட்டத்தில் கட்சியை கைப்பற்றுவதற்கு ஏதுவாக பெரும்பாலான நிர்வாகிகள் தனக்கே ஆதரவாக இருப்பதை அன்புமணி உணர்த்தினார்.
ஐடி விங்கை வளைத்த அன்புமணி:
பாமக சட்டவிதிகளின்படி, கட்சி நிர்வாக அதிகாரம் என்பது தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் வசமே உள்ளது என அன்புமணி குறிப்பிட்டுள்ளார். அந்த மூன்று பதவிகளை வகிப்பவர்களும் அவரது அணியில் உள்ளனர். இதைதொடர்ந்து, நவீன அரசியலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அணியாக உள்ள, ஐடி விங் நிர்வாகிகளையும் அன்புமணி அண்மையில் சந்தித்து பேசினார். அப்போது 99 சதவிகித கட்சி நிர்வாகிகள் தங்களுக்கே சாதகமாக இருப்பதாக அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், கட்சி தனது கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பதையும் மறைமுகமாக விளக்கியுள்ளார்.
டெல்லிக்கு பறக்கும் அன்புமணி?
இந்நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு, அன்புமணி இன்று பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அதிகாரிகளை சந்தித்து மனு மற்றும் பிரமாண பத்திரங்களை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில், ”கட்சியின் பெரும்பாலனா நிர்வாகிகளின் ஆதரவு தனக்கே உள்ளதாகவும், பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தானே தலைவராக தொடர்வதாகவும், ராமதாஸ் அறிவித்த நிர்வாகிகள் மாற்றம் செல்லாது” என்றும் அன்புமணி வலியுறுத்த உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் ராமதாஸ் குற்றச்சாட்டுகளை அடுக்கிய நேரத்தில், நிதானமாக காய்களை நகர்த்தி நிர்வாகிகளை தனக்கு பின்னே அணி திரள செய்து, தேர்தல் ஆணையம் மூலம் தற்போது கட்சியை அதிகாரப்பூர்வமாக தனது கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் அன்புமணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.





















