Periyar Syllabus: பாஜக நீக்கிய பாடங்களை மீண்டும் சேர்த்த காங்கிரஸ்...கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு!
கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு வரலாற்று பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு வரலாற்று பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல சமூக மற்றும் சமய சீர்த்திருத்த இயக்கங்கள், சாவித்ரிபாய் புலே போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகளின் படைப்புகளும் பள்ளி பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் கன்னட மொழி ஆகிய பாடப் புத்தகங்களில் இருந்த சில பாடங்கள், கடந்த பாஜக ஆட்சியில் நீக்கப்பட்டன. குறிப்பாக, சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரள மாநிலத்தின் நாராயண குரு ஆகியோரின் பாடங்கள் நீக்கப்பட்டன. இதற்குக் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சித்தராமய்யா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
பெரியார் வரலாறு மீண்டும் சேர்ப்பு
இந்த குழு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், சமூக மற்றும் சீர்திருத்த இயக்கங்கள், சமுதாய முன்னேற்றத்துக்கான இலக்கியங்கள் ஆகியவை மீண்டும் பள்ளி பாட நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெரியார், கிரிஷ் கர்னாட், தேவனூரு மகாதேவா, விஸ்வேஸ்வரய்யர் உள்ளிட்டோர் குறித்த பாடங்கள் மீண்டும் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
2024 – 25ஆம் ஆண்டில் 114 பாட நூல்களில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக 44 கன்னட பாட நூல்களிலும் 70 சமூக அறிவியல் பாட நூல்களிலும் இந்த மாற்றம் வர உள்ளது.
இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலின்படி, கிரீஷ் கர்னாடின் 'அதிகாரா', பி.லங்கேஷின் 'முருக மாட்டு சுந்தரி', தேவனூரு மகாதேவாவின் 'எடேகே பிட்ட அக்ஷரா', முட்னக்கூடு சின்னசாமியின் 'சமுத்திர சும்பனா', சந்திரசேகர கம்பாராவின் 'சீமி', அக்கமஹா தேவியின் வச்சானாஸ், தேசிதாசாவின் சக்கரகிரஹனா, பட்டாவின் 'நம்ம பாஷே', கே.வி.திருமலேஷ் மற்றும் வி.ஜி.பட் ஆகியோரின் கவிதைகள் மற்றும் நாகேஷ் ஹெக்டேவின் கட்டுரை உள்ளிட்ட பல நூல்கள் கன்னட மொழி பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல சனாதன தர்மம் குறித்த விளக்கமும் 8ஆம் வகுப்பு வரலாற்று பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
திப்பு சுல்தான், ஹைதர் அலி பெயர் இல்லை
எனினும் பாஜக அரசு முன்பு நீக்கிய திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோர் குறித்த பாடங்களை காங்கிரஸ் அரசு மீண்டும் சேர்க்கவில்லை.
பாஜக எதிர்ப்பு
எனினும் இதற்கு கர்நாடக மாநிலத்தின் எதிர்க் கட்சியான பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாஜக, ’’காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்களைப் பூர்த்தி செய்யவே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட நிலையில், அதை காங்கிரஸ் அரசு நீக்கிவிட்டு, மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.