P Chidambaram: ”சிறைக்கு செல்ல பயம், பாஜக பக்கம் சாயும்” ப. சிதம்பரம்? ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் டூ 26/11 அட்டாக்
P Chidambaram: கிரிமினல் வழக்கிற்காக பயந்து கட்சிக்கு எதிராக ப. சிதம்பரம் பேசி வருவதாக, காங்கிரஸ் கட்சியினரே குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்.

P Chidambaram: ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் தொடங்கி 26/11 தீவிரவாத தாக்குதல் தொடர்பான ப. சிதம்பரத்தின் கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
பற்ற வைத்த ப.சி., - அதிருப்தியில் காங்கிரஸ்
இந்திரா காந்தி ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டாரை கையாண்ட விதம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான ப. சிதம்பரம் சொன்ன கருத்து காங்கிரஸ் கட்சியை அதிருப்தி அடைய செய்துள்ளது. ஏற்கனவே 26/11 தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும் அவர் சொன்ன கருத்துகள் கட்சிகள் மேலிடத்தை கோபமடைய செய்துள்ளது. ”காங்கிரஸிடமிருந்து அனைத்தையும் பெற்ற ஒரு மூத்த தலைவர், மனப்பூர்வமாகப் பேச வேண்டும். கட்சியை சங்கடப்படுத்தும் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிடுவது சரியல்ல” என்பதே காங்கிரஸ் உயர்மட்டக் குழு முதல் சாதாரண கட்சித் தொண்டர் வரையிலான எண்ணமாக உள்ளதாம்.
ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் விவகாரம்
அண்மையில் இமாச்சலபிரதேசத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற ப.சிதம்பரம், “ தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அமிர்தசரஸ் பொற்கோயிலை மீட்டெடுக்க, ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் எனும் தவறான வழியை இந்திரா காந்தி தேர்ந்தெடுத்தார். அந்தத் தவறுக்காக அவர் தனது உயிரை பறிகொடுத்தார். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்தை வெளியே நிறுத்தியபடியே பொற்கோயிலை மீட்டெடுக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினோம்” என பேசினார். காங்கிரஸ் ஆட்சியில் பல தவறுகளை செய்ததாகவும், அதனை தாங்கள் தான் சரி செய்து வருவதாகவும் பாஜக தொடர்ந்து பேசி வரும் நிலையில் ப. சிதம்பரத்தின் கருத்து காங்கிரஸ் தலைமையை கோபமடைய செய்துள்ளது.
26/11 தாக்குதலுக்கான பதிலடி
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா எப்படி தலையிடலாம்? என பாஜக தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த சூழலில் பேட்டி ஒன்றில் பேசுகையில், “26/11 தாக்குதலின்போது தக்க பதிலடி தர வேண்டுமென நினைத்தேன். பிரதமர் உள்ளிட்ட பிற முக்கிய நபர்களுடன் சேர்ந்து இதுகுறித்து ஆலோசித்தேன். ஆனால், இந்த விவகாரத்தில் ராணுவ நடவடிக்கை வேண்டாம் எனவும், ராஜாங்க ரீதியாக அணுகலாம் என்றும் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய வெளியுறவு சேவை (IFS) ஆகியவை தீர்க்கமாக வலியுறுத்தின. அதன் முடிவில் போரைத் தொடங்க வேண்டாம் என்று உலக நாடுகளும் அழுத்தம் கொடுத்ததன் விளைவாக, பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்கவில்லை” என ப. சிதம்பரம் பேசியிருந்தார். இதனை குறிப்பிட்டு, ”வெளிநாட்டின் அழுத்தத்தால் காங்கிரஸ் அரசு ராணுவ நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளது” என பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். ஆனால், தனது கருத்தின் வெவ்வேறு பகுதிகளை கோர்த்து, பிரதமர் கற்பனையாக பேசுவதை ஏற்க முடியாது என ப.சிதம்பரம் கணடனம் தெரிவித்து இருந்தார்.
க்ரிமினால் வழக்கால் ப.சி.,க்கு அழுத்தமா?
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., ஆன ரஷீத் ஆல்வி, சிதம்பரத்தின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, குற்றவியல் வழக்குகள் காரணமாக அவர் ஏதேனும் அழுத்தத்தில் உள்ளாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பேசுகையில், "பாஜக செய்யும் அதே காரியத்தைத்தான் சிதம்பரம் செய்கிறார். அவரது அறிக்கை துரதிர்ஷ்டவசமானது. சிதம்பரம் மீது ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் அவர் இப்படி பேச சிதம்பரம் மீது ஏதேனும் அழுத்தம் உள்ளதா? பாஜகவுக்கு எதிராகப் பேசுவதற்குப் பதிலாக, சிதம்பரம் காங்கிரஸின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார். இது தவறு. காங்கிரஸ் இந்தத் தலைவர்களுக்கு இவ்வளவு கொடுத்தது, ஆனால் இந்தத் தலைவர்கள் இப்போது ஏன் கட்சியை அழிக்க முயற்சிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை," என்று ரஷீத் ஆல்வி கேள்வி எழுப்பியுள்ளார்.





















