எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன்வந்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்
பாச உணர்வோடு வளர்த்த கட்சியை பாழாக்கி விட்டார். அதிமுகவிற்கு துரோகம் செய்த எவரையும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆத்மா மன்னிக்காது. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்
தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் இலஞ்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் பரிணாம வளர்ச்சி கண்ட இயக்கம் அதிமுக. தமிழ் சமுதாயம், வாழ்வதற்காக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அதிமுக தோற்றுவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உரிமை மீட்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தென்காசியில் இது 30வது ஆலோசனைக் கூட்டமாகும். மூன்று முறை எம்.ஜி.ஆர் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி தந்தார். அதனைத் தொடர்ந்து 16 ஆண்டுகள் ஜெயலலிதா முதல்வராக இருந்து தமிழக மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். வரலாறு படைத்தார் என்பது தான் ஜெயலலிதாவின் சாதனை. 1972ஆம் ஆண்டு அதிமுக உருவாக்கப்பட்ட போது இந்த கட்சி நீதியின் பாதையில், தர்மத்தின் பாதையில் செல்லும் வகையில் எம்.ஜி.ஆர் சட்ட விதிகளை உருவாக்கினார். காலத்திற்கு ஏற்றார் போல் அந்த விதிகளில் திருத்தமும், மாற்றமும் செய்யலாம் என கூறப்பட்டாலும், ஒரே ஒரு விதியை மட்டும் திருத்தம் செய்யக்கூடாது என உருவாக்கப்பட்டது. அதன்படி கட்சியின் உச்சபட்ச பதவியான பொதுச்செயலாளர் பதவியை தொண்டர்கள் மூலமாகத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையின்படி உருவாக்கினார். அதனை ஜெயலலிதா கடை பிடித்தார். 50 ஆண்டு காலம் தமிழக மக்களுக்காக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தியாக வாழ்க்கை மேற்கொண்டனர்.
இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சதிவேலைகள் செய்தது. இதனையெல்லாம் எதிர்கொண்டு பல்வேறு பொய் வழக்குகளை எதிர்கொண்டு, தியாக வாழ்க்கை மேற்கொண்டு ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட யாராலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக நம் கையில் தந்தார் ஜெயலலிதா. முதல் தர்ம யுத்தத்திற்கு பிறகு இரு பிரிவுகளாக இருந்த நாங்கள் ஒன்றாக சேர்ந்தோம். இருப்பினும் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என பொதுக்குழுவில் கூறப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்து புதிய பதவியை உருவாக்கினார்கள். தொண்டர்களின் வாக்குகளைப் பெற்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை என பேச வைத்தார். முதல்வராவதற்கு கூவத்தூர் அரங்கேற்றத்தை போல குறுக்கு வழியில் சாதித்து காட்டியுள்ளார். தமிழக மக்கள் நம்மை நியாயத்திற்காக போராடுகிறார்கள் என பாராட்டுகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொறுப்பேற்ற பிறகு 8 தேர்தல்களிலும் தோல்வி அடைந்துவிட்டது. தேர்தலுக்கு முன்பாகவே அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வே ண்டும் என சில மாவட்டச்செயலாளர்ளை பேச வைத்தார்.
அந்த பாவத்தையும் நாங்கள் செய்தோம். ஆனால் தமிழக மக்கள் சட்டசபை தேர்தலில் எடப்பாடிபழனிச்சாமியை நம்பவில்லை . அதற்கு காரணம் அவரது நம்பிக்கை துரோகம் தான். 32ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஆட்சி பொறுப்பில் அதிமுக நீடித்தது . மக்களிடம் சென்று ஓட்டு கேட்டு வெற்றி பெறாமல் முதல்வரானார். ஆனால் மக்களை சந்தித்து ஓட்டு கேட்ட போது அவரை மக்கள் நம்பவில்லை. மிகப் பெரிய வரலாற்று கட்சியான அதிமுகவை அதல பாதாளத்தில் தள்ளி விட்டார். பாச உணர்வோடு வளர்த்த கட்சியை பாழாக்கி விட்டார். அவரிடம் உள்ள பணம் மக்களிடம் பேசாது. தலைமைக் கழக நிர்வாகிகளிடம் வேண்டுமானால் அந்த பணம் பேசலாம். அதிமுகவிற்கு துரோகம் செய்த எவரையும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆத்மா மன்னிக்காது. எடப்பாடி பழனிச்சாமி தாமாகவே முன்வந்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் நம்முடைய கூட்டணி 40இடங்களிலும் வெற்றிபெறும். மக்களவை தேர்தல் நமக்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.