ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீதான வழக்கு.. சட்டப்படி எதிர்கொள்வோம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்
செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது இடையூறு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாக்கு பதிவின்போது ஒருவரை பிடித்து தாக்குதல் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, குற்றவாளிகளை கண்டுப்பிடித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் ஒப்படைத்தது குற்றமா? முதலமைச்சர் வெளியிட்ட செய்தி கண்டனத்திற்குரியது. ஒரு நாட்டின் முதலமைச்சர் சட்ட ஒழுங்கை பாதுகாக்க கூடியவர். திமுகவின் இந்த 9 மாத கால ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அதிமுகவை பொறுத்தவரை சட்டரீதியாக எதையும் சந்திக்க தயார்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Jayakumar: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு !
தொடர்ந்து பேசிய அவர், ”நாளை நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் வெற்றிப்பெற்றாலும் தோல்வியுற்றதாக அறிவிக்க சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையமும், தேர்தல் அலுவலர்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நடந்து கொள்ள வேண்டும். மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை ஜனநாயக முறைப்படி வாக்கு எண்ணி அறிவிக்க வேண்டும். அதுதான் நீதி, தர்மம்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த இந்த தேர்தல் பல இடங்களில் அமைதியாகவே நடைபெற்று முடிந்தது. சில இடங்களில் மட்டும் சில சலசலப்புகள் ஏற்பட்டது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்று, வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்