Niira Radia Tape Case:நீரா ராடியா உரையாடலில் குற்ற நோக்கம் இல்லை... 14 வழக்குகளைக் கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு
காங்கிரஸ் ஆட்சியில் தொழிலதிபர்கள் சார்பில் ஒன்றிய மத்திய அமைச்சக அதிகாரிகளிடம் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய டேப் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீரா ராடியா மீதான 14 வழக்குகளைக் கைவிடுவதாக சிபிஐ அறிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் தொழிலதிபர்கள் சார்பில் ஒன்றிய மத்திய அமைச்சக அதிகாரிகளிடம் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய டேப் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2ஜி ஊழல் வழக்கு பெரிதாகப் பேசப்பட்டபோது நீரா ராடியாவின் பெயர் அடிபட்டது. இதனையடுத்து 2008, 2009ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சில மாதங்கள் அவரது தொலைபேசி அழைப்புகளை கண்காணித்து பதிவு செய்ய அன்றைய மத்திய அரசு உத்தரவிட்டது.
அரசியல்வாதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களிடம் அவர் பேசியதாக வெளியான ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்நிலையில் நீரா ராடியா பேசிய உரையாடல்கள் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு விசாரணை தொடங்கி நடைபெற்றது. இதில் நீரா ராடியாவின் 8000 தொலைபேசி உரையாடல்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. நீரா ராடியாவின் இந்தத் தொலைபேசி உரையாடல்களால் 12 ஆண்டுகளாக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இவர் மீதான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
முன்னதாக அவரது 8000 தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்த பிறகு, நீரா ராடியா மீதான 14 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் நீரா ராடியாவின் உரையாடலில் எந்தவிதமான குற்ற நோக்கமும் இல்லை என்றூம் முதற்கட்ட விசாரணையைக் கைவிடுவதாகவும் சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.