சைக்கிளில் வந்து மனு அளித்த அர்ஜுன் சம்பத் - பெட்ரோல் விலையை குறைக்க கோரிக்கை
’’எதிர்க்கட்சியாக இருந்த போது விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு 30,000 வழங்க சொன்ன மு.க.ஸ்டாலின் தற்போது ஏக்கருக்கு 8,000 மட்டுமே வழங்குகிறார்’’
பெட்ரோல் டீசல் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நூதன முறையில் சைக்கிளில் வந்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை குறைத்துள்ளது இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெட்ரோல் டீசலை கொண்டு வர விடாமல் அரசு தடுக்கிறது. இன்று வரை பெட்ரோல் டீசல் விலையும் குறைக்கப்படவில்லை, இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையம் பகுதியில் இருந்து சைக்கிள் பயணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர். இதுகுறித்து அர்ஜுன் சம்பத் கூறுகையில்,
தீபாவளி பரிசாக மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது. அதனை பின்பற்றி பாண்டிச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் விலையை குறைத்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க முன்வந்துள்ளது. ஆனால் தமிழக அரசு இதுகுறித்து தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகள் நிவாரணம் ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிய ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு ஏக்கருக்கு 8,000 வழங்குகிறார், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்காக 20 பொருள்கள் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் வழங்கியது போல் 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கிறோம். தமிழக அரசை வலியுறுத்தும் வகையில் இது அமையும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. கண்துடைப்புக்காக குறைந்த தொகை பெட்ரோல் விலையில் குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பில் தமிழக அரசு ஈடுபடவில்லை மேலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எதிர்ப்பை கைவிட்டு பெட்ரோல் டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து அர்ஜுன் சம்பத் மனு அளித்தார்