“தொலைபேசியை ஒட்டு கேட்கிறார்கள்; நான் தனியா என்ன பேசுனாலும் வெளிவந்துடுது” - அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
தமிழகத்தில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னை திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக தொடர்ந்து நீட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதாலேயே குண்டு வீசியதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, " தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்னுடைய பாதுகாப்பு குறைந்து விட்டது. முன்பு எனது வீட்டிற்கு பாதுகாப்பு இருந்தது. இப்போது எனக்கு ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மட்டும்தான் பாதுகாப்புக்கு இருக்கிறார். நாங்கள் கோழை அல்ல. எனக்கு வீட்டிலிருந்த பாதுகாப்பு எடுக்கப்பட்டுவிட்டது. என்னுடைய பாதுகாப்பு Y- யிலிருந்து x-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. பயணத்தின் போது இருந்த பாதுகாப்பு எடுக்கப்பட்டு விட்டது. என்ன காரணத்திற்காக இந்த பாதுகாப்பை புலனாய்வு துறை எடுத்தது என்று தெரியவில்லை.
உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுகிறது
என்னுடைய தொலைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது. என்னுடைய உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு, அதை புலனாய்வுத்துறை ட்விட்டர், யூடியூப் தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிலருக்கு அனுப்புகின்றனர். அவர்கள் அதை பிரேக்கிங் என்று சொல்லி வெளியிடுகின்றனர்.
தமிழ்நாட்டை பொருத்தவரை புலானாய்வுத்துறைதான் காவல்துறை மீது ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்நாடு காவல்துறைக்கு, புலனாய்வுத்துறைக்கான ஏடிஜிபிதான் தலைவர் என்பது போல நடந்து கொள்கிறார். காவல்துறை சார்ந்த முடிவுகளை எப்போது புலனாய்வுத்துறைக்கான தலைவர் எடுக்கிறாரோ, அப்போது காவல்துறை அரசியலாக மாறும். தமிழ்நாடு புலனாய்வு துறை என்னுடைய போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதைதான் முழுநேர வேலையாக செய்து வருகிறது.
பா.ஜ.க அலுவலகத்தில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு
முன்னதாக தி நகர் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “ நேற்று இரவு கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது இதுகுறித்து புகார் அளித்துள்ளோம். ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவர் இதற்கு முன் மூன்று முறை பெட்ரோல் குண்டு வீசியுள்ளார் நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக செயல்படுவதால் குண்டு வீசியதாக வாக்கு மூலம் அளித்ததை மட்டும் எடுத்துக்கொண்டு முழுமையாக விசாரிக்காமல் காவல்துறை அறிக்கை அளித்திருப்பது நகைச்சுவையாக உள்ளது.
தற்போது வரை FIR பதிவு செய்யவில்லை,கை ரேகைகள் எதுவும் கைபற்றாமல் காவல்துறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். எனவே காவல்துறை கூறியுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் தமிழக பாஜக நிர்வாகிகள் அலுவலகங்கள் தாக்கப்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ள இந்த வழக்கை NIA விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
சம்பவம் செய்தவருக்கும் கல்விக்கும் இடைவெளி
சம்பவம் செய்தவருக்கும் கல்விக்கும் பல ஆயிரம் கிலோமீட்டர் இடைவெளி இருக்கும் அப்படிப்பட்ட ஒருவர் இதுபோன்ற சம்பவத்தை செய்ய வாய்ப்பில்லை. இதன் பின் யார் உள்ளார்கள் என விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.