Annamalai Vs Minister Senthil Balaji : 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச்.. பெரும் பொய்களே.. அண்ணாமலையை கேள்வி கேட்ட அமைச்சர்
பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பான இந்த சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளார் செந்தில் பாலாஜி
பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் குறித்த விமர்சனம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கெனவே தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கருத்து மோதல் முட்டியுள்ள நிலையில் அண்ணாமலை தொடர்பான இந்த சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளார் செந்தில் பாலாஜி, அதில்...
“சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார்.
37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம்.
கணுக்கால் தண்ணீரில் டைட்டானிக் ட்ராமா.
9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ்.
4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச்.
இன்று, ரூ.345/- மெஷின் 10,000 ரூபாய்.
ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே..
#காதுகள்பாவமில்லையா”
எனத் தனது பாணியில் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அண்ணாமலை தொடர்ந்து பொய் கூறி வருவதாக அவர் அதில் மறைமுகமாகத் தாக்கி குற்றம்சாட்டியுள்ளார்.
சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார்.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 22, 2022
37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம்.
கணுக்கால் தண்ணீரில் டைட்டானிக் ட்ராமா.
9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ்.
4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச்.
இன்று, ரூ.345/- மெஷின் 10,000 ரூபாய்.
ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே.. #காதுகள்பாவமில்லையா
முன்னதாக, சமூக ஊடகங்களில் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் வாட்ச் விலை 3.5 லட்ச ரூபாய் என பகிரப்படுவது குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்திருந்த அவர், “சமீபகாலமாக அரசியலில்வாதிகளின் உடை, பயன்படுத்தும் பொருட்கள் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றது. கையில் கட்டி இருக்கும் வாட்ச் 3.5 லட்ச ரூபாய். ரபேல் விமானத்தின் பார்ட்ஸ்ஸை வைத்து இந்த வாட்ச் செய்தார்கள். மொத்தம் 500 வாட்சுகள் நாட்டில் இருக்கின்றது. ரபேல் விமானம் ஓட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதன் பக்கத்தில் இருக்கும் இந்த வாட்சை கட்டி இருக்கின்றேன். ஓவ்வொரு வாட்ச்சிற்கும் எண் இருக்கும், இது 149 வது வாட்ச். என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும். நான் தேசியவாதி. அதனால் ரபேல் வாட்ச்சை கட்டி இருக்கின்றேன், இது என் தனிபட்ட விஷயம்” எனப் பதிலளித்தார்.
இதற்கிடையே, கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து மேடையில் பேசிய அண்ணாமலை, ”திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவில் இதுவரை இல்லாத அளவிற்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவிற்கு 25 எம்.பி.க்களுக்கு மேல் கிடைக்கும். ரஃபேல் வாட்சை வைத்தே 25 எம்.பி.க்களை வாங்கி விடலாம்.
தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஊழல் நடைபெறுகிறது. இதுவரை ஊழலைப் பற்றி பேச வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ரஃபேல் வாட்ச் பில் என்னிடம் தான் உள்ளது. இந்த வாட்சைப் பற்றி தற்போது சமூக வலைதளங்களில் தான் பேசுகின்றனர். இந்த வாட்ச் பற்றி மக்கள் டீக்கடையில் பேசும்போது பில்லை வெளியிடுவேன். திமுக 2 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. கருணாநிதி இருந்திருந்தால் நமக்கு இவ்வளவு வாய்ப்பு கிடைத்திருக்காது. 2 ஜி வழக்கால் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல் திமுக இருந்ததை போல, நாடாளுமன்ற தேர்தலில் ரஃபேல் வாட்ச் முக்கிய பங்காற்றும்” எனப் பேசியிருந்தார்.