100 உடன்பிறப்புகளுக்கு ஒரு சவரன் தங்கம்...! மணக்க மணக்க கறிவிருந்து - எம்.ஜி.ஆர் பாடலை பாடி திக்குமுக்காட வைத்த அனிதா ராதாகிருஷ்ணன்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாட துவங்கியதும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர் சிலர், அனிதா ராதாகிருஷ்ணன் மீது பணத்தாள்களை தூவ இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதை எடுத்து சென்றனர்
திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் அரசியல் என்றைக்குமே அதிரடியானதுதான். அரசியல் என்றாலே அதிரடி தான், அதிலும் அனிதா ராதாகிருஷ்ணன் அரசியல் என்றால் என்றுமே அதகளம் தான் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார். வழக்கமாக தொண்டர்களை பாராட்டுகிறேன் என்ற பெயரில் சால்வை அணிவித்து போட்டோ எடுத்து கொள்வது என இல்லாமல் தங்கமோதிரம் போட்டு கறிவிருந்து வைத்து தடபுடல் காட்டி அசத்தி உள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன்.
நடந்து முடிந்த நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் பொறுப்பாளர்களாக பணியாற்றிய திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான தண்டுபத்தில் நடைபெற்றது. பாட்டுக் கச்சேரி, கலைநிகழ்ச்சிகள் என அப்பகுதி விழாக்கோலோம் பூண்டநிலையில் மணக்க மணக்க அசைவ உணவை பரிமாறி அப்பகுதி மக்களை திக்குமுக்காட செய்துவிட்டார். இதற்காகவே 4500 கிலோ வெள்ளாடு கறி, 2 ஆயிரம் கோழிகள், 40 ஆயிரம் முட்டைகள் என விருந்தில் தடபுடல் காட்டப்பட்டது. மேலும் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 100 பேர்களுக்கு தலா ஒரு சவரனில் தங்கமோதிரமும் திமுக நிர்வாகிகளை கௌரவப்படுத்தும் வகையில் 100 பேருக்கு தலா ஒரு போனையும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.
அந்த பகுதியே விழாக்கோல பூண்டிருந்தது. இங்கு நடைபெற்ற பாட்டு கச்சேரிக்குள் மைக்கை பிடித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாட துவங்கியதும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர் சிலர், இதிலும் அவரது ஆதரவாளர் ஒருவர் ரூபாய் நோட்டுக்களை அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூவ இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பணத்தை எடுத்து சென்றனர்.
அதே போன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மெகா கோலப்போட்டி நடைபெற்றது. திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கோலப் போட்டியில் 7 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெற்ற திருச்செந்தூரை சேர்ந்த செம்பி என்ற பெண்ணுக்கு 5 சவரன் தங்கச் செயின், இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்கு 3 சவரன் தங்க செயின், மூன்றாம் இடத்தை பிடித்தவருக்கு இரண்டு சவரன் தங்கச் செயினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.
மேடை அலங்காரம் இன்னிசை கச்சேரி என தூத்துக்குடி தெற்கு மாவட்டமே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பிரம்மாண்ட நிகழ்ச்சியால் திக்குமுக்காடி போனது நாடாளுமன்றத் தேர்தல் முதல் சட்டமன்றம் உள்ளாட்சி என திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுகவின் நிர்வாகிகளை பாராட்டி 100 சவரன் தங்கச் செயின் கறி விருந்து இன்னிசைக் கச்சேரி மறுநாள் பெண்களுக்கென மெகா கோலப்போட்டி 20 சவரன் தங்கச் செயின் என பிரம்மாண்டம் காட்டும் அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தச் செயல் பிற மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர்களால் நடத்தப்படுமா என திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
எம்.ஜி.ஆர் படப்பாடலில் வருவது போல் நான் வருகையிலே எங்கும் பனி மழை பொழிகிறது என்பதற்கு மாற்றாக இங்கு பண மழை பொழிந்தது என பேசி கொண்டே அசைவ விருந்தை ரசித்து சாப்பிட துவஙகினர். தனது மகன் ஆனந்த மகேஷ்வரனை கிட்டத்தட்ட முன்னிலைப்படுத்தி பிரம்மாண்டத்தை நடத்தி முடித்து விட்டார் அனிதா ராதாகிருஷ்ணன்.