மீனாவுக்கு மத்திய இணையமைச்சர் பதவி? அதிருப்தியில் பாஜக பெண் தலைவர்கள்!
மீனா விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.

நடிகை மீனா பாஜகவில் இணைய உள்ளதாகவும் அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அடிப்படை உறுப்பினர் கூட இல்லாதவருக்கு அமைச்சர் பதவியா என விஜயதரணி, உள்ளிட்ட பாஜக பெண் தலைவர்கள் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் 2009ஆம் ஆண்டு சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
அரசியலில் எண்ட்ரி
சினிமாத் துறையில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளைக் கடந்த நிலையில், தற்போது அரசியலில் எண்ட்ரி கொடுக்க முடிவு செய்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. மேலும் இந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் வீட்டு பொங்கல் விழாவில் மீனா பங்கேற்றார்.
இந்த செய்திகளுக்கு மீனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தாலும், சில தினங்களுக்கு முன்பு மீனா டெல்லி விஜயம் சென்றது அரசியலில் பேசுபொருளானது. அதுவும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார் மீனா. இந்நிலையில்தான் மீனா விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.
பெண் தலைவர்கள் அதிருப்தி
இதனையடுத்து பாஜகவில் உள்ள பெண் தலைவர்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழிசை சவுந்தரராஜன், வானதி என பாஜகவில் சீனியர்ஸ் உள்ள நிலையில், அவர்களை விட்டுவிட்டு கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட அல்லாத மீனாவுக்கு அமைச்சர் பதவி வழங்குவதெல்லாம் டூ மச் என குமுறுகின்றனர். மேலும் எம்எல்ஏ பதவியை தூக்கிப்போட்டுவிட்டு காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. ஆனால் தற்போது வரை அவருக்கும் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் இழுத்தடித்து வருகின்றன்ர். மேடையிலேயே புலம்பியும் ஒன்றும் நடக்கவில்லை என்ற ஆதங்கம் விஜயதரணிக்கு உள்ளது.
விஜயதரணிக்கு மீண்டும் ஏமாற்றம்
இப்போது தங்கள் தெற்கு மண்டலத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரனே பாஜக தலைவராகிவிட்ட நிலையில், தனக்கு ஏதாவது நடக்குமா என்ற ஏக்கத்தில் உள்ள விஜயதரணிக்கும் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்நிலையில் தான் கட்சியில் இணையாத மீனாவுக்கு இணை அமைச்சர் பதவியா என இவரும் கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பாஜகவில் மாநில அளவிலான 28 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் ஆதரவாளர்களும் நியமனப் பட்டியலில் இருக்குமாறு நயினார் நாகேந்திரனுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் மீனா, குஷ்பு இன்னும் இரண்டு பேருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






















