OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் விலகிய நிலையில், அவரது ஆதரவு சரிந்ததற்கு என்ன காரணம்? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி ஓ.பன்னீர்செல்வம். அதிமுக-வின் தூண், ஜெயலலிதாவின் விசுவாசி, முன்னாள் முதலமைச்சர், முன்னாள் துணை முதலமைச்சர் என பல பெருமைகளுக்கு உரியவரின் இன்றைய அரசியல் சூழல் என்பது மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில், கட்சியை மீட்பேன், இரட்டை இலையை மீட்பேன் என்று முழங்கிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாக இருந்த மனோஜ் பாண்டியன் இன்று திமுக-வில் இணைந்துவிட்டார். ஓ.பன்னீர்செல்வத்தின் மிகப்பெரிய பக்கபலமாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். அவரும் திமுக-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கட்சியை கைப்பற்றுவேன் என்று முழங்கிய ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பரிதாபத்திற்குரிய காரணங்கள் என்னென்ன? என்பதை காணலாம்.
1. தாக்கம் இன்மை:
எடப்பாடி பழனிசாமியுடனான மோதல் போக்கிற்கு பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் கடந்த 3 ஆண்டுகள் செயல்பாட்டை எடுத்துப்பார்த்தால் அது தமிழக அரசியலிலே, அதிமுக-விலோ எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் மிகப்பெரிய அளவில் நம்பியிருந்த பாஜக-வும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் எடுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் ஓ.பி.எஸ்.சின் இழப்பு பெரிது என்பதை உணர வைக்கவில்லை.
2. தலைமைத்துவம்:
ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் அவரை தலைமையை ஏற்றுக்கொண்டு இயங்கியவர்கள். ஆனால், அவர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் பாஜக-வின் முடிவுக்கு கட்டுப்பட்டு இயங்கியது அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வந்தவர், தற்போது தினகரன் - சசிகலாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். யாரோ ஒருவரது தலைமையின் கீழே ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதும் அவரது ஆதரவாளர்களுக்கு அவரது தலைமை மீது அதிருப்தியை உண்டாக்கியது.
3. மக்களவைத் தேர்தல் தோல்வி:
ஓ.பன்னீர்செல்வம் தான் யார் என்பதை நிரூபிப்பதற்காக கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக அந்த தேர்தலில் களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம் தோல்வி அடைந்தார். தோல்விக்கு பிறகு மிகப்பெரிய அளவில் அவரது செல்வாக்கு சரிந்தது.
4. சமுதாயத்திடம் சரிந்த செல்வாக்கு:
ஓ.பன்னீர்செல்வம் மலைபோல நம்பியிருப்பது அவரது சொந்த சமுதாயமான முக்குலத்தோர் சமுதாய வாக்குகளையும், ஆதரவையுமே ஆகும். ஆனால், அவரது சமுதாய மக்கள் சிலரிடமே ஓ.பன்னீர்செல்வம் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவரைக் காட்டிலும் தினகரன் - சசிகலா இருவருக்குமே முக்குலத்தோர் சமுதாயத்திடம் அதிக செல்வாக்குகள் உள்ளது. யாருடனாவது கரம் கோர்த்தால் மட்டுமே தனது செல்வாக்கை அதிகரிக்க முடியும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் அவரது சமுதாயம் மட்டுமின்றி பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியது.
5. தேர்தல் கணக்கு:
அரசியலைப் பொறுத்துடன் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுவது என்பது ஏதாவது ஒரு பதவி, பொறுப்பு கிடைக்கும் என்பதற்காகவே ஆகும். ஆனால், எடப்பாடி பழனிசாமியுடனான மோதல் போக்கிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளால் அவரது ஆதரவாளர்கள் யாருக்கும் பெரியளவு அரசியல் ஆதாயம் கிட்டவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்தால் தங்களது அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்ற அச்சமும் அவரை விட்டு நீங்க ஒரு காரணம் ஆகும்.
அதிமுக-வும் தன்வசம் இல்லாத சூழலில், ஆதரவாளர்களும் ஒவ்வொருவராக தன்னை விட்டு விலகியது அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறார்? என்பதே மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.





















