EPS Pressmeet:"மாமன்னன் திரைப்படத்தை பார்க்கவில்லை, எங்களுடைய இயக்கம் வேறு, அவருடைய இயக்கம் வேறு" - இபிஎஸ்
எங்களுடைய இயக்கத்தில் இருந்தவர்கள் நடித்திருந்தால் படத்தை பார்த்து கருத்து கூறியிருப்பேன்.
சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைப்பது குறித்தும் மகளிர் அணி மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் நியமிப்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பூத் கமிட்டி, மகளிர் அணி மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் நியமிப்பதற்கான படிவத்தை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி, ஆத்தூர், வீரபாண்டி ஒன்றிய நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம், ஓமலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்பாக்கி ஊராட்சியை சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றிய பொருளாளர் ராஜாமணி தலைமையில் பல்பாக்கி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேஷ் உள்பட 60 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "மேகதாது விவகாரத்தில் திமுக ஆட்சியாளர்கள் மௌனம் சாதித்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் கருத்து கண்டனத்துக்குரியது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கிவிட்டது. தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரை முறையாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழு முடிவு எடுக்கும் முடிவின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படியும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுவது என்பது ஒருபோதும் நடக்காது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிவிட்டது. அதன்படி கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் குறித்த கேள்விக்கு, ஒரு முதலமைச்சர் எதை பேசவேண்டும், பேசக்கூடாது என்பது தெரியாமல் பொம்மை முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் இருந்து வருகிறார். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கெட்டதை கூட தைரியமாக செய்தேன் என்று கூறுவது எந்த எந்தவிதத்தில் நியாயம். எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் பிரச்சினை தான் கூறவேண்டும் மற்றும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியின் தவறுகளை எதிர்கட்சியினர் எடுத்துக்காட்ட வேண்டும், அதன்படி தான் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது, கெட்ட நோக்கத்துடன் தமிழகம் முதல்வர் செயல்பட்டார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் கள்ளசாராயம் அதிகரித்துவிடும். இதற்கு கடுமையான பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும், குடிப்பவர்களை மீட்டெடுக்க வேண்டும், படிப்படியாக செயல்படுத்தி மதுவிலக்கு செயல்படுத்தப்படும் என்றுதான் அதிமுக ஆட்சியில் தெரிவித்து இருந்தோம். சென்னையில் அறுவை சிகிச்சை தவறாக செய்ததால் குழந்தை கையை இழந்தது. இதனால் குழந்தைக்கு எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. கையை இழந்த குழந்தை எவ்வாறு சிரமப்படும் என்று அனைவருக்கும் தெரியும். இன்றைய ஆட்சியாளர்கள் கவனமாக இருந்து உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த ஆடியோ விவகாரம் குறித்து முதலமைச்சர் எந்தவித கருத்தும் கூறவில்லை, அப்படி என்றால் உண்மையாக நடந்திருக்கிறது என்று தான் மக்கள் பார்க்கிறாரகள். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியது ஸ்டாலின் தான். ஆனால் தமிழக முதல்வர் மத்திய அரசு திமுகவையும், திமுக அமைச்சரையும் பழி வாங்குவதாக கூறினார். இது உண்மைக்கு புறம்பான செய்தி என்று கூறினார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பலமுறை சமன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அதனால் நேரில் சந்தித்து விசாரிக்கப்பட்டு அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய முதலமைச்சர் உண்மையில் நேர்மையானவராக இருந்தால், தார்மீக நீதியாக அவரது அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அனைத்து மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறிய கேள்விக்கு, ”ஓபிஎஸ் குறித்த கருத்துக்கு அவரிடம் தான் கேட்கவேண்டும், கூட்டணி குறித்து பாரதிய ஜனதாவிடம் கேட்கவேண்டும். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டவர் ஓபிஸுக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை. அதிமுக என்ற பயிர் செழித்து வளர்ந்து மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றார். ஓபிஎஸ் குறித்து தொடர்ந்து பேசியவர், அதிமுக குறித்து வழக்கு நடைபெற்று வந்த போதெல்லாம் தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார் என்று ஓபிஎஸ் பேசி வந்தார். ஆனால் தொண்டர்கள் அனைவரும் ஒரே எண்ணத்தில் அதிமுகவுடன் இருக்கிறார்கள். அதிமுகவுடைய இலக்கு இரண்டு கோடி தொண்டர்களை சேர்க்க வேண்டும் என்பது தான் அதை விரைவில் அடைந்து விடுவோம். எனவே அதிமுக கட்சி வலிமையுடன் இருக்கிறது வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவிற்கு பி அணியாக இருந்து செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு முடிவின்படி கட்சியிலிருந்து அவர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டனர். மாமன்னன் திரைப்படத்தை பார்க்கவில்லை, அமைச்சர் உதயநிதி நடித்துள்ளார். எங்களுடைய இயக்கம் வேறு, அவருடைய இயக்கம் வேறு, எங்களுடைய இயக்கத்தில் இருந்தவர்கள் நடித்திருந்தால் படத்தை பார்த்து கருத்து கூறியிருப்பேன்” என்று தெரிவித்தார்.