திமுகவிற்கு பல்டி அடித்த அதிமுக மாஜி எம்பிக்கு முக்கிய பதவி.! ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
அதிமுக மாஜி எம்பி மைத்ரேயன் திமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு தற்போது கல்வியாளர் அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை சந்திக்க அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளது. மேலும் மாற்று கட்சி நிர்வாகிகளையும் தங்கள் அணியில் இணைக்கும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக அதிமுகவில் இருந்து திமுகவிற்கும், திமுகவில் இருந்து மாற்று கட்சிகளுக்கும் நிர்வாகிகள்பல்டி அடித்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக எம்எல்ஏவாக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா உள்ளிட்ட சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த மைத்ரேயன்
இதே போல அதிமுகவில் மாஜி எம்பியான மைத்ரேயனும் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், தமிழ் தேசியவாதம், கல்வி மற்றும் சமூக நீதி போன்ற துறைகளில் தீவிரமாக ஈடுபாடுள்ளவர். தனது பொது வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தொடங்கி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 1991-ம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்தார். இதனையடுத்து 2000ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தொடர்ந்து மூன்று முறை மைத்ரேயன் எம்.பி.யாக இருந்துள்ளார்.
மைத்ரேயனுக்கு திமுகவில் பதவி
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல பிளவுகளாக உருவான போது முதலில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அங்கும் சில மாதங்கள் மட்டுமே இருந்தவர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றார். ஆனால் அங்கு தனக்கு உரிய மரியாதை கிடைக்காத காரணத்தால் அங்கிருந்து விலகி திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்த மைத்ரேயனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு கல்வியாளர் அணி துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.





















