மேலும் அறிய
'முதல்வர் பதவி என்ன கடையிலா கிடைக்கிறது, பொட்டலம் கட்டி வாங்குவதற்கு?’’ - ஈ.பி.எஸ்., அடுக்கடுக்கான கேள்வி !
அதிமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் இரட்டை இலைக்கும், கூட்டணி வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர்களது சின்னத்துக்கும் வாக்களியுங்கள். - ஈபிஎஸ் வேண்டுகோள்.

ஈ.பி.எஸ்., பேச்சு
Source : whats app
ஸ்டாலினுக்குப் பின்னர் உதயநிதிதான் முதல்வர் என்று சமீபத்தில் அமைச்சர் ரகுபதி பேசினார். முதல்வர் பதவி என்ன கடையிலா கிடைக்கிறது பொட்டலம் கட்டி வாங்குவதற்கு? - ஈ.பி.எஸ் கேள்வி.
40 ஆண்டுகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் - ஈ.பி.எஸ்
மதுரை முனிச்சாலை பகுதியில் மக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்..,” மதுரை மாநகராட்சியில் மக்கள் கஷ்டப்பட்டு வரி கட்டுகிறார்கள், ஆடு மாடு பன்றிக்கும் வரி போட்டுவிட்டனர். அப்படி வரி போட்டு கொள்ளை அடித்தது தான் சாதனை. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறைகேடுகள் அனைத்தும் தோண்டியெடுத்து மக்கள் முன்பு வெளிப்படுத்துவோம். அதிமுக ஆட்சி இருக்கும்போது பெண்களுக்கு சிரமம் இல்லாமல் வீட்டுக்கே குடிநீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக 1300 கோடியில் முல்லை பெரியாறு அணையில் இருந்து குழாய் வழியாக தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டத்தை அதிமுக. கொண்டுவந்தது. அதிமுக கொண்டுவந்தது என்பதால் திமுக கிடப்பில் போட்டுவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும். 40 ஆண்டுகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும். இப்படி ஒரு திட்டமாவது இந்த பகுதியில் நிறைவேற்றினார்களா?
மேலிடம் யார் என்பது உங்களுக்கே தெரியும்
ஸ்டாலினுக்குப் பின்னர் உதயநிதிதான் முதல்வர் என்று சமீபத்தில் அமைச்சர் ரகுபதி பேசினார். முதல்வர் பதவி என்ன கடையிலா கிடைக்கிறது பொட்டலம் கட்டி வாங்குவதற்கு? மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு கருணாநிதி குடும்பம் என்பது மட்டுமே அடையாளம். கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலினை முதல்வர் ஆக்கினர், இப்போது உதயநிதியைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள், அடுத்து இன்பநிதியையும் கொண்டுவருகிறார்கள். இப்படிப்பட்ட குடும்ப ஆட்சி வரவேண்டுமா..? அடுத்தாண்டு தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டிய தேர்தலாக இருக்க வேண்டும். இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால், அதிமுகவில் மட்டும்தான் அப்படி வர முடியும், திமுகவில் முடியாது. எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள். கூடுதலாக பெறும் தொகை முழுக்க மேலிடம் செல்வதாக டாஸ்மாக் பணியாளரே சொல்கிறார், அந்த மேலிடம் யார் என்பது உங்களுக்கே தெரியும்.
வைகை ஆற்றின் குறுக்கே செல்லூர் பாலம் அமைக்கப்பட்டது
மதுரை தெற்கு தொகுதியில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் 365 நாட்களும் தண்ணீர் நிறைந்திருக்க 20 கோடியில் மதிப்பில் தடுப்பணை கட்டினோம். பனையூர் கால்வாய் ஒரு கோடியில் தூர்வாரியதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளாக தண்ணீர் நிர்ம்பிக் காட்சியளிக்கிறது அதற்கு வித்திட்ட அரசு அதிமுக அரசு. வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தைச் சுற்றி நடைமேடை, வண்ண விளக்குகள், நவீன சாலைகள் அமைத்து மதுரையின் பொழுதுபோக்கு இடமாக மாற்றியதன் விளைவாக ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கியது அதிமுக அரசு. வைகை ஆற்றின் குறுக்கே செல்லூர் பாலம் அமைக்கப்பட்டது, குருவிக்காரன் சாலை அண்ணாநகர் இடையே பாலம் அமைக்கப்பட்டது. திருமலைநாயக்கர் மஹால் வாயில் அருகே உலகத்தரம் வாய்ந்த நவீன பூங்கா அலங்கார மின்விளக்குகளால் அமைக்கப்பட்டது.
மதுரையில் திட்டங்கள்
50 லட்சத்தில் விளக்குத்தூண் காமராஜர் சாலை சீரமைத்து அலங்கார விளக்குகள், நீரூற்றுகள் அமைக்கப்பட்டது, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு ஏழைகளுக்கு தகுந்த சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10 தூண் மண்டபம் புனரமைக்கப்பட்டது, காவல்நிலையங்களுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டது, இவையெல்லாம் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள். நெல்பேட்டை முதல் வில்லாபுரம் வரை புதிய பாலம் வேண்டும் என்றும், மத்திய அரசு உதவியுடன் கீழ் மதுரை ரயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் என்றும், பலரங்கபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும், பாதாளச் சாக்கடை திட்டம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இவை எல்லாம் அதிமுக ஆட்சி வந்த பின்னர் நிறைவேற்றித் தரப்படும். அதிமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் இரட்டை இலைக்கும், கூட்டணி வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர்களது சின்னத்துக்கும் வாக்களியுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















