மேலும் அறிய
தொழிற்சங்க தேர்தலில் போட்டியிட்ட அரசு பேருந்து ஓட்டுனரின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக மறியல் !
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சாலை மறியல் போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விசிக சாலை மறியல்
Source : whats app
திமுக தொழிற்சங்க தேர்தலில் போட்டியிட்ட அரசு பேருந்து ஓட்டுனரின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் - கடும் போக்குவரத்து நெரிசல்.
ஓட்டுநர் சடலம் மீட்பு - கொலை வழக்கு பதிய கோரிக்கை
மதுரை திருப்பரங்குன்றம் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ராமகிருஷ்ணன் என்பவர் நேற்று உச்சப்பட்டி மயான பகுதியில் கழுத்தில் கயிறுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஓட்டுனர் ராமகிருஷ்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும், காவல்துறையினரை கண்டித்தும், தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், குற்றவாளிகளை கைது செய்யகோரியும், ராமகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மர்மமான உயிரிழப்பு என போராட்டம்
அரசு பேருந்து ஓட்டுனர் ராமகிருஷ்ணனின் உயிரிழப்பு குறித்து காவல்துறை வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் திமுக தொழிற்சங்கமான அரசு போக்குவரத்து கழக திருப்பரங்குன்றம் கிளை தொ.மு.ச நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவர் மர்மமான உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து போராட்டத்தை நடத்தினர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சாலை மறியல் போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் உடலை பெற்றுக் கொள்ளுமாறு ராமகிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் ராமகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்குபதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறினர். இதன் காரணமாக ஓட்டுனர் ராமகிருஷ்ணனின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















