Jose Charles Martin : ’விஜய்க்கு வாழ்த்து சொன்னது ஏன்?’ ஜோஸ் சார்லஸ் பிளான் இதுதானா..?
புதுச்சேரியில் இளம் அரசியல்வாதிகளுக்கான தேவை அதிகரித்து இருப்பதால் அந்த இடத்தை பிடிக்க ஜோஸ் சார்லஸ் முயற்சித்து வருகிறார்

பிரபல லாட்டரி மார்ட்டினின் அதிபரும் புதுச்சேரி அரசியலை குறி வைத்து காய் நகர்த்தி வருபவருமான ஜோஸ் சார்லஸ் நேற்று நடைபெற்ற விஜயின் மாநாட்டிற்கு திடீரென வாழ்த்துச் சொல்லி அரசியல் களத்தில் புதிய தீயை கொளுத்திப் போட்டிருக்கிறார். ஜோஸ் சார்லஸ் இதுவரையில் பாஜக ஆதரவு நிலைபாட்டிலேயே இருந்து வரும் நிலையில், பாஜகவை கொள்கை எதிரி என பிரகடனப்படுத்தியிருக்கும் விஜய்க்கு ஜோஸ் சார்லஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரியில் மீண்டும் அதே கூட்டணி ?
புதுச்சேரியில் தற்போது NR காங்கிரஸ் – பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் 2026 தேர்தலில் மீண்டும் இதே கூட்டணி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசியலில் கால் பதிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் ஜோஸ் சார்லஸ் எடுத்து வருகிறார். குறிப்பாக, அவர் பாஜக-வின் முகமாக புதுச்சேரியில் போட்டியிடுவார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், புதுச்சேரியில் அரசியல்வாதிகள் பெரும்பாலானும் அனுபவமிக்க வயதான மனிதர்களாகவே இருப்பதால், இளம் அரசியல் வாதி குறித்த தேடல் புதுச்சேரி இளைஞர்கள் மத்தியில் உள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் ஜோஸ் சார்லஸ், புதுச்சேரியில் பல்வேறு விதமான சமூக, நல்த்திட்ட பணிகளை செய்து அங்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.
ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த சார்லஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையை விமர்சித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டவர் ஜோஸ் சார்லஸ். இத்தனைக்கும் ஆதவ் அர்ஜூனா சார்லஸ்சின் சொந்த மச்சான். ஆனால், உறவு வேறு, அரசியல் வேறு என்பதில் அவர் தெளிவாக இருந்து ஆதவ் அர்ஜூனாவிற்கு கண்டனம் தெரிவித்தார். அப்போதே புதுச்சேரியின் பாஜக முகமாக ஜோஸ் சார்லஸை தேசிய பாஜகவினர் முன்னிலைப்படுத்தத் தொடங்கிவிட்டனர் என்ற பேச்சுக்கள் எழுந்திருந்தது.
இந்நிலையில், திடீர் என ஜோஸ் சார்லஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், அவர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்குகிறாரா? என்ற கேள்வியும். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அவர் மேற்கொள்ளும் முயற்சியா? என்ற பேச்சுக்களும் தற்போது எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முகமாக, ஜோஸ் சார்லஸை, விஜய் முன்னிருத்தினால். அங்கு சார்லசின் தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளதால் அவர் எளிதாக அங்கு கட்சியை வளர்த்து, முதல்வராக கூட ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதனடிப்படையிலேயே ஜோஸ் சார்லஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்றும், அவருடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் ஜோஸ் சார்லஸ் அறிவிப்பார் என்றும் புதுச்சேரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





















