(Source: ECI/ABP News/ABP Majha)
EPS: மாநில சுயாட்சி.. திராவிட மாடல் போன்ற உருட்டுகள் எதற்கு? - முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் விசாரணையே தொடங்கப்படாத நிலையில், அவர்களை குற்றவாளிகள் என குறிப்பிட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், முதலமைச்சர் தனது குடும்பம் மற்றும் செந்தில் பாலாஜி மீது உள்ள குற்றங்களை மறைக்க மாநில சுயாட்சி, திராவிட மாடல், ஆளுநருடன் மோதல் போன்ற உருட்டுகளை நடத்துவது, தன்னை உத்தமர் போல காட்டிக்கொள்ளவா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், ”காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்வதுபோல், 10 ஆண்டுகால அகோர பசியைத் தீர்க்க, நாலா திசைகளிலும் பாய்ந்து, பல்லாயிரம் கோடிகளை கபளீகரம் செய்துள்ளதாக சமூக ஊடகங்களும், செய்தி ஊடகங்களும் இந்த விடியா திமுக அரசை தினந்தோறும் குற்றம் சுமத்தி வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ”காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல், ஊழல் சேற்றில் புரளுவதையே தொழிலாகக் கொண்ட ஊழலின் ஊற்றுக் கண்ணான தி.மு.க., அதன் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், மற்றவர்களைப் பார்த்து ஊழல்வாதிகள் என்றும், குற்றவாளிகள் என்றும் புலம்பித் திரிகின்றனர்.
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகில் வாழும் இந்த ஆட்சியாளர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து மீள, மத்திய அரசிடம் சரணாகதி படலத்தை தொடங்கி உள்ளார்கள். அதன் முதல்படியாக ஸ்டாலின், தன் கட்சியினர் வாக்களிக்காமல் தேர்வான மேதகு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு கடிதம் எழுதி உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் யார் காலில் விழுந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், அந்தக் கடிதத்தில் எங்கள் மீது விழுந்து பிராண்டுவதை அனுமதிக்க முடியாது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ரகசிய (?) கடிதத்தில், “குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம்" என்ற தலைப்பில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நஞ்சை கக்கி இருக்கிறார்.
எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி ஆகியோர் மீது, தனது ஏவல் துறையைவிட்டு பொய் வழக்கு போட்டுவிட்டு, இவரே நீதிபதியாக மாறி, குற்றம் சுமத்தியவர்களை 'குற்றவாளிகள்' என்று குறிப்பிட்டு ஒரு மோசடி அரசியலை செய்யும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாகக் கண்டிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ மக்கள், ஆட்சி அமைப்பதற்காக அளித்த அதிகாரத்தைக் கொண்டு, மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வக்கில்லாத இந்த விடியா அரசு, வரி உயர்வு, கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு என்று மக்கள் விரோத நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.