மகாத்மா காந்தி கையில் ராமர் இருந்தால் அமைதி.. ஆர்.எஸ்.எஸ் கையில் இருந்தால் கலவரம் - கே.எஸ்.அழகிரி
”மகாத்மா காந்தி கையில் ராமர் இருந்தபோது நாட்டில் அமைதி நிலவியது, அதே ஆர்.எஸ்.எஸ் கையில் ராமர் இருக்கும்போது கலவரம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையை போக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸின் கொள்கை”
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்த முருகன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறுகையில்,
நெல்லையில் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து தற்செயலானது என சொல்ல முடியாது. மிகுந்த கவனக்குறைவு காரணமாக ஏற்பட்டுள்ளது. ஒரு குவாரி எப்படி இயங்க வேண்டும், குவாரியில் எப்படி கருங்கல் தோண்டி எடுக்கவேண்டும் என்பதற்கெல்லாம் விஞ்ஞான பூர்வமான விதிகள் இருக்கிறது, ஆனால் இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என தெரியவில்லை, காரணம் அதிகாரிகள் மிகுந்த மெத்தனத்தோடு இருந்திருக்கிறார்கள். அந்த குவாரியை நடத்துபவர்களும் லாப நோக்கத்தோடு இருந்திருக்கிறார்களே தவிர பாதுகாப்பு பற்றி அவர்கள் அக்கறை செலுத்தவில்லை. எனவே அரசு இது போன்ற குவாரிகள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், விதிகளின் படி இயங்க வேண்டும்,
இந்த விபத்தில் இறந்து போனவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம், இறந்து போனவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழக காங்கிரஸ் சார்பில் வழங்குவதாக இருக்கிறோம், இன்னும் குவாரியின் கீழ் 3 பேர் இருப்பதாக கூறுகின்றனர், நவீன உலகத்தில் வேறு கிரகத்திற்கே செல்ல முடியும் பொழுது, கண்டம் விட்டு கண்டம் பாய கூடிய ஏவுகணையை நாம் செலுத்தும் பொழுது ஒரு 100 அடிக்கு கீழே இருக்கக்கூடிய மனிதரை மேலே கொண்டு வர முடியாதபோது மிகுந்த சிரமமாக இருக்கிறது, விஞ்ஞானத்தை தவறானதுக்கு நாம் பயன்படுத்துகிறோமே தவிர தேவையானதுக்கு நாம் பயன்படுத்தவில்லை.
எனவே அதிகாரிகள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும், வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடக்காமல் பாதுக்காக்க வேண்டும் என தெரிவித்தார், சட்டத்திற்கு புறம்பாக இயங்குகிறது என ஒரு அதிகாரி சொன்னால் அவரை தூக்கிலிட வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதை அவர்கள் எப்படி அனுமதித்தார்கள், இதைப்போல் ஒரு பெரிய விபத்து நடந்த பிறகு தப்பித்துக்கொள்ள இது போன்று சொல்வது முறையா என்று கேள்வி எழுப்பினார், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
”ஆர்.எஸ்.எஸ் ஒரு புதிய கொள்கையை மக்களிடையே சொல்லிக் கொள்கிறார்கள். நம்ம மதத்தை நாம்தான் ஆதரிக்க வேண்டும், அதில் என்ன தவறு என பச்சையாக சொல்கின்றனர். யாருமே மதத்திற்கு எதிராக இல்லை. காங்கிரஸ் கட்சி மதத்திற்கு எதிரானதோ கடவுளுக்கு எதிரானதோ அல்ல. அவரவர் சார்ந்த மதத்தை விரும்புகிறோம். நம்முடைய கடவுளை நாம் வழிபாடு செய்கிறோம். ஆனால் அந்த உணர்வை ஒரு தாக்குதலாக மற்றவர்கள் மீது செலுத்தக்கூடாது என்பது தான் காங்கிரசின் கொள்கை.
என்னுடைய கடவுள், என்னுடைய ஜாதியை மற்றவர்களிடம் திணிக்கக்கூடாது. அப்படி திணிப்பது அன்பிற்கு மனித குல ஒற்றுமைக்கு அது பயன்படாது, எனவே பொதுமக்களிடம், இளைஞர்களிடம் காங்கிரஸ் சொல்ல வேண்டிய செய்தி நமக்கு கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை உண்டு, ஆனால் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் அரசியல் செய்யாதீர்கள் என்பதுதான். மகாத்மா காந்தி கையில் ராமர் இருந்த போது நாட்டில் அமைதி நிலவியது, அதே ஆர்.எஸ்.எஸ் கையில் ராமர் இருக்கும்போது கலவரம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையை போக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸின் கொள்கை” என தெரிவித்தார்,