Kavitha KCR: குடும்ப ஆட்சி என்று விமர்சித்த அண்ணாமலை.. சரமாரி கேள்வியால் திக்கு முக்காட வைத்த முதலமைச்சர் மகள்!
ABP Southern Rising Summit 2023: குடும்ப ஆட்சி என்று கூறிய அண்ணாமலையிடம் தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர். மகள் கவிதா எழுப்பிய பதில் கேள்வியால் விவாதம் ஏற்பட்டது.
இந்தியாவின் முன்னணி குழுமமான ஏபிபி நெட்வொர்க் குழுமம் தெற்கின் எழுச்சி என்ற பெயரில் “ABP Southern Rising Summit 2023” என்ற பெயரில் கருத்தரங்கு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் இந்த கருத்தரங்கை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கவிதா - அண்ணாமலை- கார்த்திக் சிதம்பரம்:
இந்த நிலையில், மாலையில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகளும். எம்.எல்.சி.யுமான கவிதாவும். காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகிய மூன்று பேரும் ஒரே அமர்வில் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்தனர்.
அப்போது, கவிதா எம்.பி. பேசியதாவது, இந்திய அரசியலில் எப்போதும் மூன்றாவது அணியின் வளர்ச்சி உள்ளது என்றார்.2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பேரம் பேசும் சூழல் உருவாகலாம். இந்தியா கூட்டணி இரண்டு முறை கூடி பா.ஜ.க.வுக்கு முன் பலமாக உருவெடுக்கும். எனவே, கூட்டணி சரியாமல் உறுதியாக உள்ளது.
குடும்ப ஆட்சி:
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவாக சொல்லி, தமிழக மக்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பா.ஜ.க. சொல்லுமா?” என்று கேள்வி எழுப்பினார். அப்போது, அண்ணாமலை குடும்ப ஆட்சி பற்றி பேசியபோது அதற்கு பதில் கேள்வி எழுப்பிய கவிதா, நீங்கள் குடும்ப ஆட்சி பற்றி பேசுகிறீர்கள். உங்கள் கட்சியில் ஜோதிராவ் சிந்தியா குடும்ப ஆட்சி செய்யவில்லையா? நீங்கள் தி.மு.க.வை குடும்ப ஆட்சி என்று சொல்கிறீர்களா? அவர்களுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்தபோது குடும்ப ஆட்சி என்று தெரியவில்லையா? மகாராஷ்ட்ராவில் கூட்டணியில் இருந்தபோது உத்தவ் தாக்கரே குடும்ப ஆட்சி என்று தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலையின் கேள்விக்கு கவிதா எம்.எல்.சி. எழுப்பிய பதில் கேள்வியால் விவாதம் சூடுபிடித்தது.