அமைச்சர் உதயநிதி வருகை - கரூரில் மீண்டும் பிரமாண்டத்தை ஏற்படுத்த போகும் அமைச்சர் செந்தில் பாலாஜி
. பயனாளிகளுக்கு பேருந்தில் ஏறும் போதே காலை உணவு வழங்க வேண்டும். விழா மேடைக்கு வந்து பயனாளிகள் இருக்கைளில் அமர வைக்கவும் பொறுப்பாளாகள் உறுதியாக இருக்க வேண்டும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மார்ச் 4 ஆம் தேதி அன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களுக்கு பல்வேறு துறை சார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அரசு துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தவும், மாவட்டம் முழுவதும் 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம், மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதாவது: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் வருகைக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது .எனவே, இந்த நிகழ்ச்சி நடைபெறும் அதிகாலை 10 மணி ராயனூர் பகுதியில் நடைபெறுகின்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்வுகள் என்பது சிறப்பாக நடைபெற வேண்டும். மேலும் ஆயிரக்கணக்கான பயனாளிகள் வரவுள்ளதால் அங்கு இருக்கக்கூடிய சாலைகள் கூறுகளாக இருப்பதால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு வாகனத்திற்கு ஒரு பொறுப்பாளர் என்று முறையில் அரசு துறை சார்ந்திருக்கிறவர்களை ஒரு பேருந்துக்கு பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். பயனாளிகளுக்கு பேருந்தில் ஏறும் போதே காலை உணவு வழங்க வேண்டும். விழா மேடைக்கு வந்து பயனாளிகள் இருக்கைளில் அமர வைக்கவும் பொறுப்பாளாகள் உறுதியாக இருக்க வேண்டும். இதே பேரில், விழா முடிவடைந்தவுடன் மேடையில் இருக்க கூடிய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி முடித்தவுடன், விழா நிறைவு பெறுகின்ற போது, அரங்கத்தில் உள்ள மீதம் இருக்க கூடிய பயனாளிகக்கு நலத்திட்ட உதவிகளை அந்தந்த பொறுப்பாளர்கள் அங்கேயே வழங்க வேண்டும் இதே போல், பயனாளிகளுக்கு மதிய உணவும் வழங்க வேண்டும்.
காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு, தொடர்ந்து 11 மணிக்கு 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் துவக்கி வைக்கவுள்ளார்கள். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு க்கூட்டம் நடைபெறுகிறது. இந்த விழாக்கள் சிறப்பாக நடைபெற அனைத்து துறைகளும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். ஏற்கனவே, தமிழக முதல்வர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி கரூருக்கு பெருமை சேர்த்தது குறிப்பாக , இந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டு உள்ளது.
எனவே, இப்போது இந்த பயனாளிகளின் பட்டியலோடு சேர்த்து புதிய திட்டங்களுக்கான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, இதே போல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. எனவே அனைத்து துறை அலுவலர்கள் முழு மனதுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
பின்னர், விழா நடைபெறவுள்ள ராயனூர் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும், திருமாநிலையூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர், நிலமெடுப்பு கவிதா, மாநகராட்சி துணை மேயர் சரவணன் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டார்.