Karnataka Politics: அடம்பிடிக்கும் சீனியர்கள்.. பாடம் கற்காத காங்கிரஸ்.. பயன்படுத்திக்கொள்ளும் பாஜக..!
Karnataka Politics: தேர்தலில் வெற்றிபெறுவதை விட யாரை முதலமைச்சராக்குவது என்ற மிகப்பெரிய சவால் தான் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் அதிகம் இருந்திருக்கிறது.
கர்நாடகாவில் யார் முதலமைச்சராகப்போகிறார் என்ற கேள்விக்கு விடை பலநாள் இழுபறிகளுக்குப் பிறகு இன்று கிடைத்திருக்கிறது. பலரும் எதிர்பார்த்தது தான். சித்தராமையாவையே முதலமைச்சராக அறிவித்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம். தேர்தலில் வெற்றிபெறுவதை விட யாரை முதலமைச்சராக்குவது என்ற மிகப்பெரிய சவால் தான் காங்கிரஸ் முன்னே இருக்கிறது. பாஜகவிலும் இரட்டை தலைமை பிரச்சனை இருந்திருக்கிறது. கர்நாடகாவிலிருந்தே உதாரணத்தைச் சொல்லலாம். 2018 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது ஜனதா தளமும் காங்கிரஸும். ஆனால் ஓராண்டுக்குள்ளாக ஆட்சி கலைய பாஜக ஆட்சிக்கு வந்தது. மூத்த தலைவர் எடியூரப்பா முதலமைச்சரானார். மூன்றாண்டுகள் தான் ஆட்சி நடத்தியிருப்பார். அவரை பதவி விலக சொன்னது தலைமை சத்தமில்லாமல் ராஜினாமா செய்துவிட்டு பொறுப்பை பசவராஜ் பொம்மையிடம் ஒப்படைத்தார். ஆனால், காங்கிரஸில் அப்படியில்லை. அதிகார போட்டியில் ஆட்சி கவிழ்ந்த வரலாறே அங்கு இருக்கிறது.
2018ல் மத்திய பிரதேசத்திற்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது காங்கிரஸ். அதற்கு முன்பு 2003 முதல் 2018 வரை இருந்த பாஜக அரசை தூக்கியடித்துவிட்டு அமைந்த அரசு அது. காங்கிரஸுக்கான வாய்ப்பை மக்களே வழங்கியிருந்தனர். ஆனால், காங்கிரஸில் யாரை முதலமைச்சராக்குவது என்ற பிரச்சனை. ஏற்கனவே, 1980களில் அர்ஜுன் சிங் மற்றும் சுக்லா சகோதரர்களிடையே போட்டி இருந்தது. 190களில் திக் விஜய் சிங் அர்ஜுன் சிங் ஒரு அணியிலும், சுக்லா சகோதரர்கள் இரண்டாவது அணியாகவும், மாதவராவ் சிந்தியா மூன்றாவது அணியாகவும் அதிகரித்து அதிகார மோதல் நடந்தது. மற்றொரு மூத்த தலைவரான கமல்நாத் சைலண்ட்டாக இருந்தார். மூன்று பேரும் வேண்டாம் என்று கமல்நாத்தை மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக்கியது தலைமை. 2018ல் கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் மோதல். யார் முதலமைச்சராவது என்று. இறுதியில் கமல்நாத் வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். இதனால் ஏகத்திற்கும் கடுப்பான ஜோதிராதித்ய சிந்தியா கமல்நாத் அரசுக்கு குடைச்சலை கொடுத்தார்.அந்த வாக்குறுதி என்னாச்சு.. இந்த வாக்குறுதி என்னாச்சு என்று கமல்நாத்துக்கு நெருக்கடி கொடுத்தார். ஆட்சியமைச்சு 5 மாசம் தான் ஆகுது. 5 வருசம் இருக்கு கொஞ்சம் பொறுங்க என்று சமாளித்துப் பார்த்தது கமல்நாத் அரசு. இது தான் சமயம் என்று ஜோதிராதித்ய சிந்தியாவை தூக்கியது பாஜக. விமானசேவைகள் துறை அமைச்சர் பொறுப்பை அவருக்கு வழங்கியது. பதிலுக்கு தனக்கு ஆதரவான 22 எம்எல்ஏக்களுடன் வெளியேறினார் ஜோதிராதித்ய சிந்தியா. விளைவு கமல்நாத் ஆட்சி 1 ஆண்டு 97 நாள்களில் கலைக்கப்பட்டு மீண்டும் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சியே அமைந்தது. மக்களே கொடுத்த வாய்ப்பை மத்திய பிரதேசத்தில் இப்படிதான் வீணாக்கியது காங்கிரஸ்.
காங்கிரஸ் வலுவாக இருந்த மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. காங்கிரஸிலிருந்து ரங்கசாமிக்கும், காங்கிரஸுக்கும் தான் அங்கு போட்டி நிலவியது. பாஜக சீனிலேயே கிடையாது. நாராயணசாமி சீனியராக இருந்தாலும் அங்கு கட்சியை தீயாக வளர்த்தது நமச்சிவாயம் தான். புதுச்சேரியின் அடுத்த முதல்வர் இவர் தான் என்று அறியப்பட்டார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இவரை முன்னிருத்தி தான் தேர்தலே நடைபெற்றது. ஆனால், வெற்றிபெற்றதும் நாராயணசாமி முதலமைச்சராக்கப்பட்டார். பொதுப்பணித்துறை, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு இலாக்காக்கள் ஒதுக்கபப்ட்டது. ஆனாலும், அதிருப்தியில் இருந்தார் நமச்சிவாயம். நாராயணசாமிக்கும், நமச்சிவாயத்துக்கும் இடையே மோதல் நீண்டது. இறுதியாக 2021ல் அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது காங்கிரஸ் தலைமை. அவரை சமயோஜிதமாக தூக்கியது பாஜக. 2021 தேர்தலிலும் வேட்பாளராக அறிவித்தது. வெற்றிபெற்றதும் ரங்கசாமி - பாஜக கூட்டணி அமைந்தது. ரங்கசாமி முதலமைச்சராக, நமச்சிவாயம் அமைச்சராக்கபப்ட்டார். இப்போது புதுச்சேரியில் திமுகவுக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள். காங்கிரஸுக்கு இரண்டு பேர். இந்த மோதல் நிகழாமல இருந்திருந்தால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு அமைய வாய்ப்பிருந்திருக்கும்.
இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. தற்போது காங்கிரஸின் ஆளுகையில் இருக்கும் மாநிலங்களிலும் ஒன்று. இந்த ஆண்டு அம்மாநிலத்தில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அஷோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகாரப்போர் உச்சத்தில் இருக்கிறது. அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக உண்ணாவிரதம், பேரணி என்று ரகளை செய்துகொண்டிருக்கிறார் சச்சின் பைலட். இந்த அதிகார மோதலையே தேர்தல் அஸ்திரமாக பாஜக கையில் எடுக்கும் என்று தெரிகிறது. சச்சின் பைலட், கெலாட் மோதலுக்கு முடிவு கட்டப்படாவிட்டால், வசுந்தரா ராஜேவுக்கான வாய்ப்பு ராஜஸ்தானில் பிரகாசமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ் பெற்ற இந்த மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் தலைவராக நியமித்தது தான் என்று கூறப்படுகிறது. ஆனால் யார் முதலமைச்சராவது என்ற ரேசில் சீனியர் சித்தராமையாவுக்கே டிக் அடித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், புதுச்சேரியில் சம்பவங்களுக்குப் பின்னும் பாடம் கற்காமல் இதை செய்துள்ளது காங்கிரஸ். சச்சின் பைலட் போன்றோ, சிந்தியா போன்றோ, நமச்சிவாயம் போன்றோ டி.கே.சிவக்குமார் போர்க்கொடி தூக்கமாட்டார் தான்.. ஆனால் யார் கண்டார். காலம் இன்னும் மீதமிருக்கிறது. பார்க்கலாம்.