நீதிபதிகள் எல்லாம் பாஜகவை சேர்ந்தவர்கள் என சொல்வது தவறு - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
’’தயவு செய்து நீதியரசர்களை, நீதித்துறையை அரசியலுக்கு மேலே வையுங்கள். அரசியலுக்குள் கொண்டு வந்து விடாதீர்கள்’’
திருவண்ணாமலைக்கு பாஜக மண்டல தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு இன்று தமிழக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வருகை புரிந்தார். அதற்கு முன்னதாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதற்கு பின்னர் பத்திரிகையார்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் "முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நடப்பது என்றும். மேலும் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக பற்றி ஸ்டாலின் என்ன பேசினாரோ அது தான் தற்போது சட்டமாக நடந்துகொண்டு உள்ளது என்றார். ஏனெனில், அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து இரண்டு மாத இடைவெளிகளில் ஒவ்வொருவராக வரும்போதே தெரிகிறது இது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடைபெறும் சோதனை தான் என்று. அதற்கான குற்றப்பத்திரிகை போடும் போது எல்லாம் தெரியவரும் என்றார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் மாரிதாஸை பொறுத்தவரை, 2018ல் மேலப்பாளையத்தில் போடப்பட்ட ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். அந்த தேச துரோக வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் அற்புதமான ஒரு தீர்ப்பை அளித்திருந்தது. தற்போது இருக்கின்ற இரண்டு வழக்குகளைக் கூட அவர் எதிர்கொண்டு வெளியில் வருவார். 124(A) வழக்குப் போட்டு மாரிதாஸ் கருத்துரிமையை நசுங்கும் போது தான் பாஜக அவர் பின்னாடி இருந்து வழக்கறிஞர் அணியுடன் நின்று முறியடித்து வந்தோம். ஏற்கனவே 2018, மற்றும் 2020ல் அவர் மீது போடப்பட்ட வழக்குகளை அப்போதைய ஆட்சியினர், காவல்துறையினர் போதிய ஆதாரம் இல்லை என பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வழக்கும் நீதிமன்றத்திற்கு போகும்போது முறியடிக்கப்படும் என நம்பிக்கை இருக்கிறது" என்றார். மேலும் குறிப்பாக "திமுகவை சேர்ந்த நபர்கள் தான் இதுபோன்ற தேவையில்லாத வதந்திகளை, விதண்டா வாதங்களை கிளப்பிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு நீதியரசர் என்பவர் கட்சியை தாண்டி, சித்தாந்தத்தை தாண்டி வருகின்ற வழக்குகளை சட்டப்படி விசாரித்து தீர்ப்பு அளிக்கிறார்கள். எல்லா நீதியரசர்களுக்கும் அவர்களுக்கென தனிப்பட்ட கருத்துகள் உள்ளது. ஒரு நீதியரசர், கடவுள் இருக்கிறார் என நினைக்கலாம். மற்றொரு நீதியரசர், கடவுள் இல்லை என நினைக்கலாம். குறிப்பிட்டு இந்த நீதியரசரை பொருத்தவரை, அவருடைய ஆன்மீக பக்தியை சமூகவலைதளங்களில் பார்த்து வருகிறோம். அது அவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கம். ஆன்மீகத்தை நம்பக்கூடிய ஒரு நீதியரசர் அதனால் திமுகவினர் நீதியரசரை பாஜகவை சார்ந்தவர் என்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
பாஜக கட்சிக்கு சம்பந்தமில்லாத, கட்சி நடத்தாத நிகழ்ச்சியில், ஏதோ ஒரு சங்கம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் பாஜக தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். அதேபோல, நானும் பல நீதிபதிகள் உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். அப்போது, அந்த நீதிபதிகள் எல்லாம் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது தவறு இவை அனைத்தும் அபத்தமான பேச்சு என்றார். ஆகவே தயவு செய்து நீதியரசர்களை, நீதித்துறையை அரசியலுக்கு மேலே வையுங்கள். அரசியலுக்குள் கொண்டு வந்து விடாதீர்கள். இதில் சம்பந்தப்பட்ட நீதியரசர் இருந்த இடத்தில் தான் ஏ.கே.ராஜன் அவர்களும் இருந்தார். அப்படியென்றால் அவரும் பிஜேபியை சார்ந்தவர் என சொல்வது என்பது இந்த பதில் அபத்தமான குற்றச்சாட்டுகளை விட்டுவிடுங்கள். அந்த நீதியரசர் கொடுத்திருக்கும் தீர்ப்பில் என்ன தவறு இருக்கிறது. எல்லா நீதி அரசர்களையும் மதிக்கக்கூடிய கட்சி பாஜக. நாங்கள் இதுபோல் அபாண்டமான குற்றம் சுமத்த மாட்டோம். எங்களின் பல வழக்குகள் நீதிமன்றத்திற்கு போயிருக்கிறது. பல வழக்குகளில் தீர்ப்பு எதிராக வந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, பாஜக கட்சி எப்போவாவது ஒரு நீதியரசரை 'இந்த கட்சியை சார்ந்தவர்' என குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறோமா அப்படி சொல்லவே கூடாது என்றார்.
பின்னர் திமுகவினர் தேவையில்லாத அரசியல் விளையாட்டை விளையாடுகிறார்கள். நீதித்துறையை அரசியலாக்க முயற்சிக்கும் போது தான், கடைசியில் நீதித்துறைக்கு அந்த நிம்மதி நிலை எப்படி வரும் என்றார். நான் ஏற்கனவே சொன்னது போல அதிமுகவுடன் எந்த குழப்பமும் இன்றி கூட்டணி இருக்கும்போது, மூன்றாவது கூட்டணி என்கின்ற பேச்சுக்கே தமிழகத்தில் இடமில்லை" என்றார்.பொதுமக்கள் இரண்டு தவனை தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டுமென்றும் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் 70% சதவீத அளவிற்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்னும் 30 சதவீதம் அளவிற்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் அனைவரும் முதல் மற்றும் 2-வது தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் .உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் 2 தவனை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்,.