இனி பாஜக vs ஆம் ஆத்மிதானா? காங்கிரஸுக்கு என்னதான் ஆச்சு?
தேர்தல் நேரங்களில் மட்டும் ஆக்டிவாக இருப்பதே காங்கிரஸ் கட்சியின் மைனஸாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

இடைத்தேர்தல்கள் மூலம் தேசிய அளவில் பாஜக vs ஆம் ஆத்மி என களத்தை மாற்றி காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது வட இந்தியாவில் சரிவை சந்திக்கிறாரா ராகுல்காந்தி என்ற கேள்வி வருகிறது. அதுவும் கூட்டணி கட்சிகளே காங்கிரஸுக்கு தலைவலியாக மாறியுள்ளன.
குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா மாநில சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பஞ்சாபின் லுாதியானா மேற்கு, குஜராத்தின் விசாவதர் தொகுதிகளை ஆம் ஆத்மி தட்டிச் சென்றது. கேரளாவின் நிலம்பூர் தொகுதியை காங்கிரஸும், மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியை திரிணாமுல் காங்கிரஸூம், குஜராத்தின் காடி தொகுதியை பாஜகவும் கைப்பற்றின.
பெயரளவில் மட்டும்தான் கூட்டணி?
டெல்லி சட்டசபை தேர்தலில் சரிவை சந்தித்து அதிகாரத்தை இழந்த ஆம் ஆத்மி, இடைத்தேர்தல்களில் பாஜக, காங்கிரஸையே பின்னுக்கு தள்ளி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி காங்கிரஸுக்குத்தான் பேரிடியாக மாறியுள்ளது. இந்தியா கூட்டணியில் 2 கட்சிகளும் இருந்தாலும் தேர்தல் களத்தில் எதிர் எதிராக நின்று முட்டி மோதுகின்றன. அதனால் கூட்டணி வலிமையாக இல்லை, பெயரளவில் மட்டும்தான் இருக்கிறது என பாஜகவினர் ரவுண்டு கட்டி வருகின்றனர்.
அதற்கு ஏற்றார்போல் காங்கிரஸுக்கு செக் வைக்கும் வகையில் ஆம் ஆத்மி களத்தில் போட்டியாக நிற்கிறது. ஏற்கனவே டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பிற்குள் நுழைந்த ஆம் ஆத்மி தேசிய அரசியலில் காலூன்றியது. தற்போது பாஜகவின் கோட்டையாக இருக்கக் கூடிய குஜராத்திற்குள்ளேயே ஆம் ஆத்மி அடியெடுத்து வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மைனஸ்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குஜராத்தை குறிவைத்து தீவிர பிரச்சாரம் செய்தும் எதுவும் கைகொடுக்கவில்லை. குஜராத் காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றம் என அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார் ராகுல் காந்தி. இருந்தாலும் தேர்தல் நேரங்களில் மட்டும் ஆக்டிவாக இருப்பதே காங்கிரஸ் கட்சியின் மைனஸாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து களப்பணிகள், கட்சி கட்டமைப்பில் கவனம் செலுத்தி வருவதே அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக அமைகிறது. பாஜக vs ஆம் ஆத்மி என களம் மாறியுள்ளதால் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைமையின் கீழ் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.






















