Dravidian Model : ’திராவிட மாடல் ஆட்சி குறித்து புகழ்ந்த இந்திய தூதர்’ அப்படியெல்லாம் இல்லையென அணைக் கட்டிய ஆளுநர்..?
’திராவிட மாடல் என்று சொல்லி செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழுமையடைவதில்லை என்ற ஆவணங்கள் என்னிடம் உள்ளது என்று ஆளுநர் பேசியதாக தகவல்’
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் தங்களது மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் முன்னேற்ற ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தை பதத்தை பயன்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூட ’Belongs to the Dravidian stock’ என்ற வார்த்தையை அவர் சேர்த்த பிறகு, அது நாடு முழுவதும் வைரல் ஆகி இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
திராவிட மாடல் அரசு
ஒவ்வொரு திட்டத்தை தொடங்கி வைக்கும்போது, அரசு, அரசு சாரா மேடைகளில் பேசும்போதும் இது ‘திராவிட மாடல் அரசு’ என்ற வார்த்தைக்கு வார்த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். சமூக நீதி, சமத்துவம், சரிவிகித வளர்ச்சி, ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வு என திராவிட மாடலுக்கான விளக்கத்தை அவர் அளித்தாலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தர்பங்களில் இதுவா திராவிட மாடல் ? என குறைகளை சுட்டிக் காட்டி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றன.
அமைச்சர்களால் அதிருப்தியடைந்த முதல்வர்
திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என திமுகவினர் முழங்கி, புகழ்ந்துக்கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் சில அமைச்சர்களின் நடவடிக்கைகளும் அவர்களது பேச்சுகளும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை நடந்து முடிந்த திமுக பொதுக்குழுவில் வெளிப்படையாக பேசி, கடுமையாகவும் கண்டித்தார் திமுக தலைவர் ஸ்டாலின், அதற்கு சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூட, அதிருப்தியை ஏற்படுத்தும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அரசை விமர்சிக்கும் ஆளுநர் ?
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்து கடுமையாக பேசி வரும்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் தன் பங்கிற்கு மறைமுகமாக திமுக அரசை விமர்சித்து வருகிறார். உதாரணமாக, திருக்குறளை சிலர் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறர்கள், தமிழ்நாட்டில் தீண்டாமை கொடுமை இன்னும் நிலவுகிறது, நீட் தேர்வு ஏழை மாணவர்களின் நலனுக்கானது, புதிய கலவிக் கொள்கை கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் உள்ளிட்ட தன்னுடைய பேச்சுகளால் அவ்வப்போது திமுகவையும் அரசையும் சீண்டி வருகிறார் ஆளுநர் ரவி. அதே நேரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்க அதிகாரம் இல்லை என்று பத்திரிகையாளர்களை ராஜ்பவனுக்கு அழைத்து சொல்வது, துணை வேந்தர்களை அழைத்து துறை அமைச்சர் இல்லாமல் மாநாடு நடத்துவது என தன் பங்கிற்கு ஆளுநரும் அரசியல் செய்கிறார் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியே பல்வேறு கட்டங்களில் கடுமையாக விமர்சித்துள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த தூதர்கள்
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி சிங்கப்பூர், நைஜீரியா, ஐஸ்லாந்து, சூடான், கியூபா, பாப்புவா நியூ கினியா, பிஜ்ஜி, மலாவி, சுரிநாம், ஜைபூதிய ஆகிய நாட்டிற்கான IFS அதிகாரிகளான, இந்திய தூதர்கள் தலைமைச்செயலகம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள், அப்போது தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், தாங்கள் பணியாற்றும் நாடுகளில் உள்ள தமிழர்களே இதனை தங்களிடம் சொன்னார்கள் என்றும் தூதர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் திமுக அரசு பின்பற்றும் ‘திராவிட மாடல்’ கான்செப்ட் குறித்தும் அவர்கள் புகழ்ந்து பேசியுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு – திராவிட மாடல் குறித்து விமர்சனம் ?
அதன்பிறகு, அன்று பிற்பகலிலேயே ராஜ்பவன் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியையும் சந்தித்து தூதர்கள் பேசியுள்ளனர். அப்போது, சிலர் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவது குறித்தும், திராவிட மாடல் கான்செப்டை பின்பற்றி வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் முறை பற்றியும் பேசியுள்ளனர். இதனை இடைமறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திமுக அரசு அப்படி சொல்லிக்கொள்ளும் விதத்தில் ஒன்றும் செயல்படவில்லையென்றும், விளம்பரங்களில் மட்டுமே அக்கறை காட்டுவதாகவும் தூதர்களிடம் விமர்சித்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதோடு, மத்திய பாஜக அரசு ’ஒரே நாடு’ என்ற திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருக்கும்போது, திராவிட மாடல் என்ற சொல்லாடலும் அதன் திட்டாக்கமும் மத்திய பாஜக அரசின் ’ஒரே நாடு’ என்ற முயற்சிக்கு தடையாக இருக்கும் என்றும், இது பிரிவினையை உண்டாக்குமே தவிர, வளர்ச்சியை தராது எனவும் ஆளுநர் விமர்சித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது
அதோடு, திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்றும் அதற்கான ஆவணங்களும் கோப்புகளும் தன்னிடம் உள்ளதென்றும் தூதர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் வைத்து பேசியதாக தகவல் கசிந்துள்ளது.
கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு
திமுக ஆட்சி குறித்தும் திராவிட மாடல் பற்றியும் ஆளுநர் இப்படி விமர்சித்ததாக சொல்லப்படும் செய்தியை, தூதர்களில் சிலர் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் அதனால் கோட்டை வட்டாரமே பரபரப்பாக இருப்பதாகவும் தெரிகிறது.