பாஜகவில் இருந்து விலகிய கோவாவின் முன்னாள் முதல்வர்.. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிருப்தி!
கோவா மாநில பாஜகவுக்குப் பெரும் பின்னடைவாக, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லக்ஷ்மிகாந்த் பார்சேகர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கோவா மாநில பாஜகவுக்குப் பெரும் பின்னடைவாக, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லக்ஷ்மிகாந்த் பார்சேகர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கோவா மாநிலத்திற்கு நடத்தப்படவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் இந்த முடிவைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த லக்ஷ்மிகாந்த் பார்சேகர், `முறைப்படி என்னுடைய விலகல் கடிதத்தை அளிக்க உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
லக்ஷ்மிகாந்த் பார்சேகரின் மாண்ட்ரேம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏவான தயானந்த் சோப்டே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு கோவா மாநில சட்டமன்றத் தேர்தலில் தயானந்த் சோப்டே, லக்ஷ்மிகாந்த் பார்சேகரைத் தோற்கடித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இருந்த தயானந்த் சோப்டே, 2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
கோவாவின் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிகரின் மகன் உத்பால் பாரிகர் பனாஜி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவில் இருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்த மறுநாளே இப்படியான அறிவிப்பு வெளியாகி கோவா பாஜகவினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்ஷ்மிகாந்த் பார்சேகர் மாண்ட்ரேம் தொகுதியின் எம்.எல்.ஏவாக 2002ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். மேலும் தற்போதைய கோவா பாஜகவின் செயற்குழு உறுப்பினராகவும், வரும் சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் வாக்குறுதிக்கான அணியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார் லக்ஷ்மிகாந்த் பார்சேகர்.
Former Goa chief minister and senior BJP leader Laxmikant Parsekar, who was denied ticket by the party for the upcoming state Assembly elections, said he will resign from the ruling party.
— ANI (@ANI) January 22, 2022
(File pic) pic.twitter.com/04XwVJ2YwO
தனது தந்தையும், பாஜகவின் மறைந்த மூத்த தலைவருமான மனோகர் பாரிகர் சுமார் 25 ஆண்டுகளாக வெற்றி பெற்ற பனாஜி தொகுதியில் போட்டியிடுவதற்கு உத்பால் பாரிகருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் சுயேச்சையாகப் போட்டியிடும் முடிவைத் தேர்ந்தெடுத்தார்.
தற்போதைய எம்.எல்.ஏ அடானேசியோ மான்சரேட்டை பனாஜி தொகுதிக்கான வேட்பாளராக பாஜக நியமித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் போது, காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த 10 எம்.எல்.ஏக்களுள் அடானேசியோ மான்சரேட்டும் ஒருவர்.
எனினும், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உத்பால் பாரிகர், பனாஜி தொகுதியில் பாஜக சார்பில் `நல்ல வேட்பாளர்’ நிறுத்தப்பட்டால், தான் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.