OPS Corona : ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் திடீர் அனுமதி..! கொரோனா பரிசோதனை முடிவுகள் சொல்வது என்ன...?
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், ஓ,பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் சூழலில் மிகவும் பரப்பாகவே காணப்பட்டு வந்தார். கடந்த மாதம் 23-ந் தேதி பொதுக்குழு நடைபெறுவதற்கு முன்பாக இருந்தது முதல் தொடர்ந்து தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து வந்தார்.
முதல் பொதுக்குழு முடிவுற்ற பிறகு தனது இல்லத்தில் தொடர்ந்து தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர், கடந்த 11-ந் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றபோதும் அவருடன் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உடனிருந்தனர். தொடர்ந்து தொண்டர்கள் சந்திப்பு, நிர்வாகிகள் சந்திப்பு என்று பரபரப்பாகவே காணப்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடந்த சில நாட்களாகவே உடல் சோர்வு காணப்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, ஓரிரு தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடல் சோர்வு, காய்ச்சல் காரணமாக அவர் சென்னையில் அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது.
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் அனுமதியாகியிருக்கும் தகவலறிந்த அவரது தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடும் தட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பிறகு சற்று குறைந்துள்ளது, இன்று மட்டும் 2 ஆயிரத்து 312 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு பிறகு குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 618 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )