புதுச்சேரி அரசிடம் நிதியில்லாத நிலையில் 4 கோடி செலவில் சொகுசு கார்களை வாங்குவதா? - முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி
’’சொகுசு கார்களில் வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் பொதுமக்கள் தட்டிக்கேட்க வேண்டும்’’
புதுச்சேரி அரசிடம் நிதியில்லாத பட்சத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு 4 கோடியில் சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளதற்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மத்தியில் ஆளும் மோடி அரசு இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென்பொருள் மூலமாக எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நீதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் தொலைபேசியை ஒட்டு கேட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இஸ்ரேல் நாட்டில் இருந்து ஏவுகணைகள் வாங்குவது, என்.எஸ்.ஒ. அமைப்பிடம் இருந்து மென்பொருள் வாங்குவது தொடர்பான கையெழுத்திட்ட ஒப்பந்தம் மத்திய அரசிடம் உள்ளது. அதை மூடி மறைக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. எனவே விசாரணை முடியும் வரை பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் அவர், வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
Watch Video: சாலையில் விழுந்த இளைஞர் - நொடிப்பொழுதில் தப்பிய நிம்மதி.. பதைபதைக்கும் வீடியோ
இந்தியாவில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்க முடியாது. புதுவை மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. இதனை அரசும் கண்டுகொள்ளவில்லை. புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை முதலமைச்சர் ரங்கசாமி தடுத்து நிறுத்த வேண்டும்.
புதுவை அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்காக சுமார் 4 கோடி செலவில் 11 புதிய சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளன. மாநில அரசிடம் நிதியில்லாத பட்சத்தில் வீண் செலவு ஏன் செய்ய வேண்டும். சொகுசு கார்களில் வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் பொதுமக்கள் தட்டிக்கேட்க வேண்டும்.
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பு ஏற்றபின் ரவுடிகள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். அவர்கள் தொழிற்சாலை, கடைகளில் மாமூல் கேட்டு வசூலித்து வருகிறார்கள். இதனை காவல் துறை கண்டுகொள்ளாமல் ரவுடிகளுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள் என அதில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்