Abpnadu Exclusive : ’சசிகலா தலைமையேற்காவிட்டால் அதிமுக காணாமல் போய்விடும்’ - முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி பிரத்தேக பேட்டி
"அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும். டிடிவி தினகரன் வழிகாட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை நடத்த வேண்டும்"
![Abpnadu Exclusive : ’சசிகலா தலைமையேற்காவிட்டால் அதிமுக காணாமல் போய்விடும்’ - முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி பிரத்தேக பேட்டி Former Admk Mla Aarukutty opines that Admk will disappear if Sasikala does not lead Abpnadu Exclusive : ’சசிகலா தலைமையேற்காவிட்டால் அதிமுக காணாமல் போய்விடும்’ - முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி பிரத்தேக பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/bf94814e00291f72b38bd3cf5fc9009e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை விளாங்குறிச்சி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும். டிடிவி தினகரன் வழிகாட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை நடத்த வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கட்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. கட்சியினர் சந்தோஷமாக இல்லை. கட்சியினர் கரை வேட்டி கட்டிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வீதிக்குள் செல்லும் நிலை இல்லை. இரட்டை தலைமையால் எங்கு சொல்வது எனத் தெரியவில்லை. கட்டுப்பாடு இல்லாமல் கட்சி செல்கிறது. சசிகலா தலைமையேற்றால் கட்சி சரியாகும். இல்லையென்றால் அதிமுக காணாமல் போய்விடும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விருப்பப்படி 100 வருடம் அதிமுக இருக்க வேண்டும் என்றால், எல்லோரும் ஒன்று சேர்ந்து இருந்தால் மட்டும் முடியும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு இரட்டை தலைமை தான் காரணம் என்பது மாற்றுக் கருத்து இல்லை. அதிமுகவினர் மனம் உடைந்து உள்ளனர். ஜா- ஜெ அணிகள் இருக்கும் போது தோற்றது போல, இம்முறையும் அதிமுக தோற்றுள்ளது. இதனை சரிகட்ட சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. யார் சொல்லியும் இதனை நான் சொல்லவில்லை.
தர்மயுத்தம் நடத்திய போது ஒபிஎஸ் பக்கம் செல்ல அன்றைய சூழலே காரணம். பின்னர் தொகுதி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இபிஎஸ் பக்கம் சென்றேன். இருவரும் கட்சியை வெற்றிகரமாக நடத்துவார்கள் என நம்பி ஆதரவு தெரிவித்தேன். ஆனால் மக்கள் இரட்டை தலைமையை ஏற்கவில்லை. ஒபிஎஸ், இபிஎஸ் இருவரையும் குறை சொல்ல முடியாது. அவர்களால் முடிந்ததை செய்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.
அதிமுக மீண்டும் இணைவதற்கு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி தடைகல்லாக இருப்பார்களா என்ற கேள்விக்கு, ”அப்படி தடையாக இருக்கக் கூடாது. அப்படி விரும்பினால் அவரவர் பகுதிகளில் தனித்தனியாக கட்சி நடத்திக் கொள்ள வேண்டும். மாற்று கருத்து இருக்கக்கூடாது. ஒன்றிணையவில்லை எனில் இயக்கம் காணாமல் போகும்” என அவர் பதிலளித்தார்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2011 முதல் 2021 வரை இரண்டு முறை அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக ஆறுக்குட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு ஆதரவு தெரிவித்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி தான். பின்னர் ஒ.பி.எஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)