Amit Shah: ட்ரம்புக்கு இந்தியா - பாகிஸ்தான் போர்.. மோடிக்கு நேரு, காங்கிரஸ் - அமித் ஷா மீது கடும் தாக்கு
Amit Shah: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நேருவின் ஆட்சிக் காலத்தில் இல்லாத முதுகெலும்பை, பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Amit Shah: இந்தியாவின் 11 ஆண்டுகள் ஆண்ட பிறகும் பிரதமர் மோடி, தங்கள் கட்சியை சார்ந்த பிரதமர்களை குறை சொல்வதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளார் என காங்கிரஸ் சாடியுள்ளது.
”மோடிக்கே வெற்றி கிடைக்கும்”
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், வரலாறு மோடி மற்றும் நேருவை எப்படி நினைவு கொள்ளும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “வரலாற்று ஆய்வாளர்கள் மோடியின் ஆட்சிக்காலத்தையும் மற்ற பிரதமர்களின் ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு பார்த்தால், அதன் முடிவுகள் மோடிக்கே சாதகமாக இருக்கும். கடந்த ஒரு தசாப்தத்தில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதாரம் சர்வதேச அளவில் 11வது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆர்டிகள் 370, ராமர் கோயில், முத்தலாக், குடியுரிமை திருத்தச் சட்டம், சர்வதேச நாடுகளில் இந்திய பாஸ்போர்ட்டிற்கான மதிப்பினை உயர்த்தியது ஆகிய அனைத்து சாதனைகளும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நிகழ்த்தப்பட்டுள்ளன” என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
”முதுகெலும்பு இல்லாத வெளியுறவுக் கொள்கை”
தொடர்ந்து பேசுகையில், “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தீவிரமாக ஆராய்ந்தபிறகு, அதில் முதுகெலும்பே இல்லை என்பதை உணர்ந்தேன். ஆனால், அதில் முதுகெலும்பை சேர்க்கும் பணியை பிரதமர் மோடி செய்துள்ளார். நான் அவரை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு பாத்திரத்திலும் தன்னை வெற்றிகரமாக வடிவமைத்துக் கொள்ள முடியும் என்பதுதான் அவரது மிகப்பெரிய குணம். அவர் தனது அனைத்துப் பொறுப்புகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். இது ஒரு சிறந்த குணம்” என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சரமாரியான பதிலடி
நேரு மீதான அமித் ஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் தீவிரமாக பதிலடி அளித்து வருகிறது. முதுகெலும்பை பற்றி பேச பாஜகவிற்கு யோக்கியதை இல்லை? இந்தியா - பாகிஸ்தான் போரின் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது என அமெரிக்காவில் இருந்தபாடியே, அந்நாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் இந்திரா காந்தி. ஆனால், வர்த்தகத்தை முன்வைத்து தானே இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் ட்ரம்ப் பேசி வருவதை கூட மோடியால் நிறுத்த முடியவில்லையே ஏன்? இந்தியாவை குறிவைத்து 50 சதவிகித வரி விதிப்பு, H1B விசாவிற்கு கடும் கட்டுப்பாடுகள், போதைப்பொருள் அதிகம் கடத்தப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரை சேர்த்தது உள்ளிட்ட அறிவிப்புகளை ட்ரம்ப் வெளியிட்டு வருகிறாரே? அதற்கான எதிர் நடவடிக்கைகள் எதுவுமே எடுக்காதது தான் நீங்கள் சேர்த்த முதுகெலும்பா? சீனா என்ற பெயரையே உச்சரிக்க தொடர்ந்து மறுத்து வருவது ஏன்? அண்டை நாடுகள் பலவற்றுடனும் இந்தியாவின் உறவு நம்பகத்தன்மையாக இல்லையே ஏன்? என காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.
தான் ஒரு வலுவான தலைவர் என்பதை நிரூபிக்க இந்தியா - பாகிஸ்தான் போரை ட்ரம்ப் எப்படி பயன்படுத்திக் கொள்கிறாரோ, அதே பாணியில் தான் எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டுவதையே பாஜக தலைவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர் என காங்கிரஸ் கட்சியினர் சாடிவருகின்றனர்.





















