Erode East Election: இறுதிக்கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல்..! இன்றுடன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் நிறைவு..!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவெரா திருமகனார் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது.
இன்றுடன் பரப்புரை நிறைவு:
தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஈரோடு இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகளின் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைய உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்களது வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்த உள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் தென்னரசு, அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாத், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். இவர்களை ஆதரித்து இவர்களது கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் கடந்த ஒரு மாத காலமாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று முதலமைச்சர் பிரச்சாரம்:
தேர்தல் பரப்புரைக்கு இன்றே கடைசி நாள் என்பதால், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரையில் ஈடுபட உள்ளதால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை மறுநாள் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில், பரிசீலனைக்கு பிறகு 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 6 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், இறுதியாக 77 பேர் இடைத்தேர்தல் களமிறங்குகின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன், சீமான், அண்ணாமலை, விஜய பிரபாகரன், சுதீஷ், ஆளுங்கட்சி அமைச்சர்கள், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் தத்தம் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டனர்.
விறுவிறுக்கும் இடைத்தேர்தல்:
தமிழ்நாட்டில் வழக்கமாக இடைத்தேர்தல் என்றால் தி.மு.க. - அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்படும். ஆனால், இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. - நாம் தமிழர் கட்சியினர் இடையே தேர்தல் பரப்புரையில் கடும் மோதல் ஏற்பட்டது. பரப்புரையின்போது இரண்டு கட்சியினரும் மோதிக் கொண்டதால் பலருக்கும் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பரப்புரையின்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியின மக்கள் பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து. அவர் மீது கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Erode East By Election: நெருங்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் விதித்த அதிரடி கட்டுப்பாடுகள்..
மேலும் படிக்க: Erode Election: திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சிவிட்டது ஈரோடு ஃபார்முலா - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்