Erode By Election: அ.தி.மு.க. வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்
Erode Election: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்குத்தான் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு வேட்பாளரை அறிவிக்கும்.
ஆட்சிமன்ற குழு:
எங்களுடைய கட்சியை பொறுத்தவரையில் கருத்துக்கள் அனைத்தையும் கேட்டு, விருப்பமனு பெற்று அதனடிப்படையில் யார் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள், தொகுதியில் பரிச்சயமானவர்கள், கட்சிக்கும், எம்.ஜி.ஆருக்கும். ஜெயலலிதாவிற்கும் விசுவாசமானவர்களா? என்று ஆய்வு செய்து ஆட்சிமன்ற குழு முடிவு செய்யும். ஆட்சிமன்ற குழு அறிவிக்கும்.
தி.மு.க. மாதிரி சர்வாதிகார கட்சி கிடையாது. இது ஜமீன்தார் கட்சியோ, அரச கட்சியோ கிடையாது. 31-ந் தேதி வரை நேரம் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை நட்பு உணர்வு, தோழமை உணர்வு, கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம். அந்த அடிப்படையில் அனைவரையும் பார்த்துவிட்டோம். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.
கையெழுத்திடும் அதிகாரம்:
உதாரணத்திற்கு தேசிய கட்சிகள் மாநில அளவில் முடிவு செய்ய முடியாது. தேசிய அளவில் கேட்டுத்தான் முடிவு செய்வார்கள். மாநில கட்சிகள் உடனே கூறிவிடுவார்கள். நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. நீதிபதிகளின் தீர்ப்பு தெளிவாக உள்ளது. கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் உள்ளது. ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது.
இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் இடையே நடக்கும் போட்டி ஆகும். பணநாயகம் வென்றதா சரித்திரம் இல்லை. ஜனநாயகம்தான் வெல்லும். ஜனநாயக அடிப்படையில் வாக்காளர்கள் முழு அளவில் எங்களை ஆதரிப்பார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு சீரழிந்த மற்றும் மோசமான மாநிலமாக உள்ளது. அம்மாவின் ஆட்சியில்தான் மக்கள் அதிக நன்மைகள் பெற்றனர்."
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்டது. தி.மு.க. கூட்டணியில் அந்த தொகுதியில் ஏற்கனவே உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை கொடுத்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக உயிரிழந்த எம்.எல்.ஏ. ஈ.வெ.ரா. திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனே போட்டியிடுகிறார்.
ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது. பா.ஜ.க.வா? அ.தி.மு.க.வா? களத்தில் இறங்கப்போவது என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், அ.தி.மு.க.வே களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் தாங்கள்தான் இடைத்தேர்தலில் போட்டி என்று கூறி வருவதால், அ.தி.மு.க.வில் யார் போட்டியிடுகிறார்கள் என்றும், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.