AIADMK Issue: பொதுக்குழு நோட்டீஸில் கையெழுத்திடுவது யார்? அ முதல் ஃ வரை.. ஓபிஎஸ், இபிஎஸ் வாதம்!
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

ஜூலை 11ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி நேற்றைய உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்துப் பார்த்த நீதிபதி, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளதை சுட்டிக்காட்டி தான் என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கமளித்து பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் வாதிடுகையில், தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற பெயரில் கட்சியில் இல்லாத ஒரு அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் யார் கையெழுத்தும் இல்லை என்பதால் ஜூலை 11 பொதுக்குழு நோட்டீசே செல்லாதது என தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 23 பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததால் அவர்களால் செயல்பட முடியாது எனக் கூறி ஜூலை 11 பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாகவும்,
ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும் அவர்கள் வாதிட்டனர்.
இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்ய, அறிவிப்பு செய்ய இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது எனக் கூற முடியாது எனவும் வாதிட்டனர்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றம் பொதுக்குழு நடத்த அனுமதித்துள்ள நிலையில் வேண்டுமென்றே அதை தடுக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன் பின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் போது, பன்னீர்செல்வம் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனவும் வாதிட்டனர்.
இன்றைய நிலையில் கட்சியில் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை எனக் கூறிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர்கள், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கக் கோரினர்.
கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளை திருத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு தான் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா?பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளிவைத்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

