இபிஎஸ், ஓபிஎஸ் முடிந்தால் திராவிட நட்பு கழகத்தில் இணைந்து கொள்ளுங்கள் - சுப வீரபாண்டியன்
அவமான திமுகவா நீங்கள்? அதிமுக என்றால் அமித்சா திமுகவா? அதிமுக என்றால் அம்மா திமுக ஆவது இருந்து தொலையுங்கள், காரணம் அந்த அம்மா தன்னுடைய ஆணவம் காரணமாகவாவது சில நேரம் ஒன்றிய அரசை எதிர்த்து பேசும்.
நெல்லை வண்ணார்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் திராவிட நட்பு கழகம் அறிமுக கூட்டம் பேரவை துணைச் செயலாளர் சிங்கராயர் தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், ”பேருந்தில் பாட்டி ஒருவர் ஓசிக்கு செல்ல மாட்டேன் என்று கூறி வைரலான விவகாரத்தில் தற்போது உண்மை வெளிப்பட்டுள்ளது. அந்தப் பாட்டியின் பெயர் துளசி அம்மா அவரை அதிமுககாரர்கள் பணம் கொடுத்து அவ்வாறு பேச செய்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பெயரை சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியையும், பன்னீர் செல்வத்தையும் மிகுந்த பணிவோடு கேட்கிறேன், பெரியார் சிலையை சிதைத்த போது வாய் மூடி இருந்தீர்கள், கலைஞரை பேசுகிற போது கண்மூடி இருந்தீர்கள் போகட்டும், அண்ணாவின் சிலையை அவமதித்து இருக்கிறார்களே கேள்வி கேட்க வேண்டாமா? பிறகு என்ன அண்ணா திமுக, வெட்கமாக இல்லை. கைதான மூவரும் பாஜகவை சேர்ந்தவர்கள், அவர்களோடு கூட்டு வைத்து கொள்வதை தவிர அவமானம் வேறு ஏதாவது உண்டா? அவமான திமுகவா நீங்கள்? அதிமுக என்றால் அமித்சா திமுகவா? அதிமுக என்றால் அம்மா திமுக ஆவது இருந்து தொலையுங்கள், காரணம் அந்த அம்மா தன்னுடைய ஆணவம் காரணமாகவாவது சில நேரம் ஒன்றிய அரசை எதிர்த்து பேசும்.
அதிமுக காரர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்களை அழிப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டு நீங்கள் அழிந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களையும் காப்பாற்ற நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் இதுதான் உண்மை. யாரெல்லாம் பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்று கருதுகிறார்களோ அவர்களெல்லாம் கைகோர்க்கும் நேரம் இது. இந்த சூழ்நிலையில் நாம் நல்ல முடிவெடுக்கவில்லை என்றால் அழிந்து விடுவோம். பாஜகவின் நோக்கம் முதலில் இஸ்லாமியர்களை அழிப்பது, பின்பு கிறிஸ்தவர்களை அழிப்பது கேரளாவில் கம்யூனிசத்தை அழிப்பது, தமிழகத்தில் திராவிடத்தை அழிப்பது இதுதான், ஆனால் இது அவர்களால் முடியவில்லை. ஒரே நாடு ஒரே மொழி என பசப்பு வார்த்தை பேசுகிறார்கள் அது அவர்கள் நோக்கம் அல்ல, ஒரே நாடு ஒரே கட்சி என்பதுதான். மாநில சுயாட்சிதான் இந்தியாவின் எதிர்காலம் என தலைவர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மிக அழுத்தமாக கூறியுள்ளார், மாநில சுயாட்சி கருத்து இந்தியா முழுவதும் பரவுமானால் நாட்டில் இருந்து பாஜக விரட்டி அடிக்கப்படும், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என எச்சரிக்கிறேன். மதத்திற்கு எதிராக இருங்கள் என்று நாங்கள் கூறவில்லை, அந்த மதத்தோடு கரைந்து போகாதீர்கள் என்று தான் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் எடப்பாடிக்கும், பன்னீர் செல்வத்திற்கும் நீதிமன்றம் செல்வது தவிர வேறு எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறேர்களே. இந்த நிலைக்கு உங்களை ஆளாக்கியவர்கள் யார் என்பதை கூட புரியாமல் உள்ளீர்கள். நீங்களும் முடிந்தால் திராவிட நட்பு கழகத்தில் வந்து சேர்ந்துவிடுங்கள். மீண்டும் கூறுகிறேன் இனத்தால் நாம் திராவிடர்கள் என்று சொல்லவில்லை, நீங்கள் சித்தாந்தத்தால் கருத்தியலால் திராவிடனாக இருங்கள். தலைவர் மு க ஸ்டாலின் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். திராவிடன் என்றால் சமூகநீதி, சமத்துவம், பெண் விடுதலை, நமது எதிர்கால லட்சியம் ஆகும், எனவே திராவிடனாய், நண்பர்களாய் இணைவோம், இதை நாடு முழுவதும் எடுத்துச் செல்வோம், இயக்கமாக்குவோம், இந்த மண்ணில் கருப்பு இருக்கும், சிவப்பு இருக்கும், நீலம் இருக்கும், ஒரு போதும் காவி கால்பதிக்க முடியாது” என தெரவித்தார்.