(Source: ECI/ABP News/ABP Majha)
EPS Pressmeet: அதிமுகவை அழிப்பது என்பது வெறும் கனவாகத்தான் முடியும் - எடப்பாடி பழனிசாமி
டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், அவரின் கைக்கு அதிமுக எப்படி போகும். இதுகூட அண்ணாமலைக்கு தெரியவில்லை.
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது திமுக அறிவித்த 520 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றவில்லை. சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், 98 சதவீதம் நிறைவேற்றியுள்ளதாக பச்சைப் பொய் கூறுகிறார். இன்றைய தினம் தமிழகத்தில் நதிநீர் பிரச்சினை, போதைப் பொருள் நடமாட்டம், சொத்து வரி உயர்வு என பல பிரச்சினைகள் நிலவுகிறது. இதனை திமுக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது. மத்தியில் ஆளும் பாஜக அரசும் 2019 ஆம் ஆண்டு அறிவித்த தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை.
2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது 74 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை இன்று 102 ரூபாய் என ஆகி விட்டது. டீசல் 94 ரூபாய், கச்சா எண்ணெய் ஒரு பேரல் 86 டாலர்தான் உள்ளது. 2014 இல் 105 டாலராக இருந்தபோது, குறைவாக இருந்த பெட்ரோல் டீசல் விலை தற்போது அதிகரித்துள்ளது. அதிகமாக வரி போட்டு மக்கள் மீது மிகப்பெரிய சுமையை சுமத்தி உள்ளனர். மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் டீசல் விலை ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் இதுவரை குறைக்கவில்லை. கர்நாடகா, புதுச்சேரியில் விலை குறைந்திருக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்திருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் குறைந்து செலவு அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மளிகை சாமான்கள் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
காவிரி ஜீவநதி. 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும். ஆனால் திமுக அரசு உரிய முறையில் அணுகாத்தால் டெல்டா மாவட்ட விவசாயிகள் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணை கட்டுவோம் என அறிவித்துள்ளனர். அதற்கு முன்பு இருந்த பாஜகவும் மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறது. இரண்டு தேசியக் கட்சிகளும் இதில் ஒரே எண்ணத்தில் இருக்கிறார்கள். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும். கர்நாடக காங்கிரஸ் அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டும் திமுக அரசு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. கர்நாடக அரசிடம் இருந்து 3 டி.எம்.சி தண்ணீர் வேண்டும் என தமிழக அரசு விடுத்த கோரிக்கையை கர்நாடக அரசு நிராகரித்து விட்டது. கர்நாடகாவில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட விடுவிக்க மாட்டோம் என ஆணவத்துடன் தெரிவித்துள்ளனர். இதற்கு திமுக அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பதை கருத்தில் கொள்ளாமல் இண்டி கூட்டணிக்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில்தான் திமுக கருத்தாக உள்ளது.
முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் குறைபாடுகளை சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். எனவே இளைஞர்கள் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும். சில பத்திரிக்கைகளும் ஊடகங்களும் மத்திய மாநில அரசின் அழுத்த்த்திற்கு அடிபணிந்து, அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படுவதாக கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளனர். இது கருத்து கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு. 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.
தேர்தல் பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ், திமுக அதிகநிதி பெற்றுள்ளது. திமுக ஆன்லைன் ரம்மி சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து 565 கோடி ரூபாய் பெற்றுள்ளது. மத்திய அமைச்சர்கள் மாறி மாறி வந்து சென்றாலும் தமிழக மக்களின் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை. தேசியக் கட்சிகள் எல்லாம் மாநிலத்தை புறக்கணிப்பதால், உரிமைகள் பறிப்பதால்தான் தனித்து போட்டியிடுகிறோம்.
அடிக்கடி தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்து செல்வதால் எந்த பயனும் கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் அடிக்கடி வருகிறார்கள். தங்களுடைய துறையில் ஏதாவது ஒரு திட்டத்தை தொடங்கி வைத்திருந்தால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கும். ஆனால் தேர்தல் வாக்கு பெற வருவது வேதனையளிக்கிறது. இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் போது உரிய நிதி வழங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் இதே நிலைதான். அவர்களுடைய கட்சி ஆளும் மாநிலங்களுக்கு தாராளமாக நிதியும், மாற்று கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதுதான் இன்றைய நிலை. மின்தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லை. அதற்கேற்ப அரசு திட்டமிட வேண்டும். ஆனால், திமுக அரசு எப்போது ஆட்சிக்கு வந்தாலும் இதுபோன்று மின் தடை ஏற்படுவது வழக்கம்தான். அதிமுகவை அழிக்க யாரும் பிறந்த்தில்லை. பொன்விழா கண்ட கட்சி, 30 ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். அதிக அளவில் தேசிய விருதுகளை பெற்றிருக்கிறோம். அதிமுக என்ற கட்சி இருப்பதால்தான் ஏழைகளுக்கு திட்டங்கள் போய் சேர்ந்துள்ளது. இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத்தான் முடியும். வெற்று வார்த்தையாகத்தான் முடியும். டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், அவரின் கைக்கு அதிமுக எப்படி போகும். இதுகூட அண்ணாமலைக்கு தெரியவில்லை.
2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது. அதே அளவுக்கு வெற்றி இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கிடைக்கும். மக்கள் எதிர்பார்க்கின்ற வெற்றி கிடைக்கும். கர்நாடகத்தில் தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட அமலாக்க மறுக்கின்றனர். தமிழ்நாடு பாதிக்கும்போது அதற்கு தீர்வு காண நாம் சொந்தக் காலில் நிற்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.