EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
செங்கோட்டையனை அதிமுக-வில் இருந்து நீக்கியதால் அதிமுக-விற்கு கொங்கு மண்டலத்தில் வாக்கு சதவீதம் சரியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 6 மாத காலமே உள்ளது. அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், திமுக-வைத் தவிர மற்ற பெரும்பாலான கட்சிகள் உட்கட்சி மோதலால் அவதிப்பட்டு வருகிறது. திமுக-விற்கு நிகரான ஒரு கட்சியான அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பிறகே உட்கட்சி மோதலால் அவதிப்பட்டு வருகிறது.
செங்கோட்டையனை நீக்கிய எடப்பாடி:
கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தையும் ஓரங்கட்டிய எடப்பாடி பழனிசாமி, தனது தலைமையின் கீழே மொத்த கட்சியையும் கொண்டு வந்தார். இந்த சூழலில், கடந்த சில மாதங்களாகவே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கட்சியில் இருந்து இணைக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில், அந்த கருத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனையும் இன்று எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தென்மாவட்டத்தின் முக்கிய தலைவர்களாகவும், முக்குலத்தோர் சமுதாயத்தின் வாக்குவங்கியை கவர்வர்களாகவும் இருந்து வந்தவர்கள். அவர்களது நீக்கத்திற்கு பிறகு தென்மாவட்டத்தில் அதிமுக செல்வாக்கை மீண்டும் அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வந்த நிலையில், தற்போது தனது முடிவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்த செங்கோட்டையனை நீக்கியுள்ளார்.
கொங்கு மண்டலத்தில் சரிகிறதா வாக்கு வங்கி?
எம்ஜிஆர் காலம் முதல் அதிமுக-வில் இருந்து வருபவர், எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் விசுவாசி, 9 முறை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் என்று அதிமுகவின் தவிர்க்க முடியாத தலைவரான செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது கட்சிக்குள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் செல்வாக்கு மிகுந்தவராக உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலிலே அதிமுக-விற்கு கொங்கு மண்டலத்திலே அதிக தொகுதிகள் கிடைத்தது. ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களான தங்கமணி, செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி என முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பக்கபலமாக இருந்ததே அதற்கு காரணம்.
இபிஎஸ் - செங்கோட்டையன்:
எடப்பாடி பழனிசாமி தற்போது செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியிருப்பது ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கொங்கு மண்டலத்திலும் அதிமுக வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான எதிர்ப்பு நிலை முக்குலத்தோர் சமுதாயத்தில் ஓரளவு இருந்து வரும் சூழலில், சொந்த சமுதாயத்திலும் எதிர்ப்பும் உருவானால் அதிமுக-விற்கு பெரும் சிக்கல் உண்டாகிவிடும்.

இதை எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி பெரிய தாக்கத்தை கடந்த சில ஆண்டுகளில் ஏற்படுத்தாத நிலையில் இந்த கூட்டணியுடன் செங்கோட்டையன் கரம் கோர்ப்பதால் அது எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுத்துமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி:
அதேசமயம், கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை காட்டவும், கட்சியில் தனக்கு எதிரான கருத்துக்களை யாரேனும் முன்வைத்தாலே, தனது முடிவுக்கு எதிராக உட்கட்சி மோதலை உருவாக்கும் நோக்கில் நடந்து கொண்டாலோ என்ன நடக்கும் என்பதை காட்டுவதற்காகவும் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பாணியில் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்காெண்டுள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




















