EPS Profile: கிளைச்செயலாளர் டூ பொதுச்செயலாளர்: எடப்பாடியில் ஒரு பழனிசாமி - கடந்து வந்த பாதை!
Edappadi Palanisamy Profile: குக்கிராமத்தில் கிளைச் செயலாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, தற்போது தமிழ்நாட்டின் மாபெரும் கட்சியின் தனிப் பெரும் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சேலம், நெடுங்குளம் அருகே சிலுவம்பாளையம் என்ற குக்கிராமத்தில் கிளைக் கழகச் செயலாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy), தன்னுடைய 69ஆம் வயதில் 2023ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மாபெரும் கட்சியின் தனிப் பெரும் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
27 ஆண்டுகள் பதவி வகித்து ’அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர்’ என்று கூறப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 6.4 ஆண்டுகள் கழித்து, ஈபிஎஸ் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
விவசாயக் குடும்பத்தில் பிறந்த பழனிசாமி, ஆரம்பத்தில் வெல்ல வியாபாரம் செய்து வந்தார். பழனிசாமியின் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் செங்கோட்டையன், அவரை 1974-ல் அரசியலுக்கு அழைத்து வந்தார். அதிமுகவில் கோணேரிபட்டி கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பு பழனிசாமி வசமானது.
அப்போதும் அதிமுக உட்கட்சிப் பூசல்களால் பிளவுபட்டிருந்தது. அந்த நேரத்தில் 1989ல் பழனிசாமிக்கு எம்எல்ஏ சீட் ஒதுக்கப்பட்டது. எடப்பாடி தொகுதியில் அதிமுக ஜெ. அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார் பழனிசாமி. முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றவர் 1991 வரை எம்எல்ஏவாக இருந்தார். 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் இருந்து 'எடப்பாடி பழனிசாமி' ஆனார்.
தொடர் தோல்விகள்
தொடர்ந்து 2 வெற்றியைச் சுவைத்தவருக்கு 1996 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியையே பரிசாக அளித்தது. இம்முறை அதிமுக தலைமை 98 மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியை அளித்தது. அதில் வெற்றி பெற்றவர் ஓராண்டு எம்.பி.யாக இருந்தார். மீண்டும் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவிடமும் 2004 தேர்தலில் திமுகவிடமும் தோல்வியைத் தழுவினார்.
இடையில் கட்சிப் பணியைப் பாராட்டி, அதிமுக அவருக்கு 2001-ல் சிமெண்ட் வாரியத் தலைவர் பதவியை அளித்தது. அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
தொடர் நாடாளுமன்றத் தோல்விகளால், மீண்டும் சட்டப்பேரவை பக்கத்தில் தனது கவனத்தைத் திருப்பினார் எடப்பாடி பழனிசாமி. 2006 பேரவைத் தேர்தலில் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர், பாமகவிடம் தனது வெற்றியை இழந்தார்.
அமைச்சரான எடப்பாடி பழனிசாமி
தேர்தலில் தோற்றாலும் களப் பணியில் வென்று கட்சியில் விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக மெல்ல மாறத் தொடங்கினார். மீண்டும் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2 முறை தோற்ற அதே தொகுதியில் 56 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
2016-ம் ஆண்டிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றவருக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, முக்கியத் துறைகளில் ஒன்றான பொதுப்பணித் துறையை அளித்து அழகுபார்த்தார். இதற்குப் பின்னணியில் சசிகலா இருந்தார்.
மன்னார்குடி குடும்பத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் பிடிக்காமல் போனதை அடுத்து, கட்சியில் அடுத்த கட்டத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதற்குப் பின் அதிமுகவின் அனைத்து விவகாரங்களும் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டன. கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
எதிர்பாராமல் முதல்வர் பதவிக்கு வந்த ஈபிஎஸ்
2016 டிசம்பர் 5ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இறந்ததாக அறிவிப்பு வெளியானது. நெருக்கடி காலகட்டங்களில் ஓபிஎஸ் முதல்வராகப் பதவியேற்றதுபோல, இம்முறையும் ஓபிஎஸ் அரியணை ஏறினார். எனினும் சசிகலா முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட, அரசியல் சூழல் அவரை சிறைக்கு அனுப்பியது.
தான் திரும்பி வரும்வரை, மூத்த அமைச்சரும் முக்கிய விசுவாசியுமான எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க முடிவெடுத்தார் சசிகலா. அதைத் தொடர்ந்து 2017 பிப்ரவரி 14 அன்று எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார். அதிமுகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
கணிப்புகளைப் பொய்யாக்கியவர்
அதிக அனுபவம் இல்லாதவர், ஓபிஎஸ்ஸின் தர்ம யுத்தம், அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எடப்பாடி பழனிசாமி அதிக காலம் முதலமைச்சராக இருக்க முடியாது என்றுதான் பெரும்பாலானோர் நினைத்தனர். ஆனால் அனைவரின் கணிப்புகளையும் தகர்த்து முழு ஆட்சிக் காலத்தையும் முதலமைச்சராகப் பூர்த்தி செய்தார் ஈபிஎஸ்.
ஜெயலலிதா இறந்தபிறகு அதிமுக பொதுச் செயலாளர் இடம் காலியானது. காலத்தின் கட்டாயத்தால் ஈபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்படத் தொடங்கினர். கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் பகிர்ந்து கொண்டனர்.
கட்டுக்குள் வந்த கட்சி
ஓர் உறைக்குள் இரு கத்திகள் எப்படி என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழுந்தது. ஓபிஎஸ் கை ஓங்கும் என்று ஆரம்பத்தில் எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத வகையில் கட்சியைக் கட்டுக்குள் கொண்டு வந்தார் ஈபிஎஸ்.
தேர்தலுக்கு முன்னதாக வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி, ஓபிஎஸ்ஸின் செல்வாக்கைக் குறைத்தார். பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சிக் கட்டிலில் அமராவிட்டாலும், கட்சியில் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவைத் தன் வசமாக்கினார்.
தன்னை முதல்வராக்கிய சசிகலாவை, அவர் சிறை சென்றதும் கட்சியையே விட்டே நீக்கியவர், சிறிது நாட்களிலேயே ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரின் ஆதரவாளர்களையும் அதிமுகவில் இருந்து நீக்க முடிவு செய்தார். 2022 ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸைக் கட்சியில் இருந்து நீக்கினார். அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் ஆனார்.
சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த வழக்குகளை சட்டப் போராட்டம் மூலம் தகர்த்தெறிந்த எடப்பாடி பழனிசாமி, இன்று (மார்ச் 28ஆம் தேதி) அதிமுகவின் பொதுச் செயலாளராக, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.