Kodanad heist-cum-murder case : கோடநாடு கொலை வழக்கு : சிக்கப்போகும் பாதுகாவலர்கள் ? சிக்கலில் எடப்பாடி பழனிசாமி ?
எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் தற்போது விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. அதன்பிறகு, இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதோடு, கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் கேரளாவை சேர்ந்த சயானின் கார் விபத்துக்குள்ளானதில் அவரது மனைவி, குழந்தை உயிரிழந்தனர். சயான் படுகாயங்களோடு உயிர் தப்பினார். ஜூலை மாதத்தில் கோடநாடு எஸ்டேட்டில் கம்யூயூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்த நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
தனிப்படை அமைத்து இந்த வழக்கை நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா விசாரிக்கத் தொடங்கும்போதே கனகராஜ், கம்பியூட்டர் ஆப்ரேட்டர் என அடுத்தடுத்து உயிரிழப்புகள் சந்தேகத்திற்குரிய வகையில் நிகழ்ந்தது தமிழ்நாட்டையே பரபரப்பாக்கியது. பின்னர் பலரும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில், 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வழக்கு விசாரணையை விரைவுப்படுத்துவதற்காக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் சசிகலா வரை விசாரணையை விரிவுப்படுத்தி, குற்றவாளிகளை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவராக இருக்கும் சேலம் இளங்கோவன் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது அவரது பாதுகாவலர்களும் விசாரிக்கப்படவுள்ளது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் இருந்து இப்போது வரை மூன்று போலீஸ் அதிகாரிகள் அவரது பாதுகாவலர்களாகவே தொடர்கின்றனர். அந்த மூன்று பேருக்கும் சிபிசிஐடி போலீசார் விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்கவுள்ளனர். கோடநாடு சம்பவம் நடைபெற்றபோது ஆறுகுட்டி உள்ளிட்டோரிடம் எடப்பாடி பழனிசாமி இந்த மூவரின் செல்போன் மூலமாகவே தொடர்புகொண்டு பேசியதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மூன்று பாதுகாவலர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.