Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
தமிழ், தமிழர் உரிமை பேசும் தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிபெற்ற உருவமாக, தேவையான பிற கூறுகளையும் உள்ளடக்கியதே திராவிடம் எனலாம்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில், அண்மையில் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தினார். அதில் தனது கொள்கைகள், செயல்திட்டங்கள் குறித்து அறிவித்த அவர், ’திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்’ என்று கூறினார்.
விஜய் அரசியலுக்கு வரும் காலம் முதலே, அவரை ஆதரித்து வந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த நிலையில், விஜய் திராவிடத்தைத் தன் கண்கள் என்று கூறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
’’திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றில்லை. ஒன்று கருவாடு என்று சொல்லு, அல்லது சாம்பார் என்று சொல்லு, அதென்ன கருவாட்டு சாம்பார்? அது நடுநிலை அல்ல. மிகவும் கொடு நிலை’’ என்று சீமான் விஜயைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இந்த நிலையில் உண்மையிலேயே திராவிடம் - தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்? என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழ், தமிழர் உரிமையை வலியுறுத்துவதே தமிழ் தேசியம். தமிழ் மொழியைப் பாதுகாப்பது, தமிழர்களின் சமூக மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்துவது, தமிழர்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது ஆகியவை தமிழ் தேசியத்தின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகிறது.
இதுபற்றி தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரும் பேராசிரியருமான பெ.மணியரசன் கூறுவது என்ன?
சங்க இலக்கியங்களில் தமிழ்நாடு, தமிழகம் என இரண்டின் சொல்லாடல்களுமே பரவலாகக் காணப்படுகின்றன. இவை எல்லாமே மூலக் கூறுகளாகவே அப்போது இருந்தன. எனினும் பிற்காலத்தில்தான் தமிழ் தேசியம் என்னும் கருத்தியல் வரையறுக்கப்பட்ட, நவீன முறையில் உருவானது.
மறைமலை அடிகள் 1916ஆம் ஆண்டு தனித் தமிழ் இயக்கம் என்பதை தொடங்கினார். அதுதான் தமிழ்த் தேசியத்திற்கு அடிப்படையாக அமைந்தது. பிற மொழி ஆதிக்கங்கள் தமிழில் இருக்கக்கூடாது. அயல் மொழிகளைக் கலக்காமல் தமிழைப் பேச வேண்டும், எழுத வேண்டும், தமிழ் முறைப்படி திருமணம் உள்ளிட்ட ஆன்மிக சடங்குகளைச் செய்ய வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தினார். இப்படி, தமிழ்த் தேசிய அரசியலுக்கு மறை மலையடிகள்தான் முன்னோடி.
தமிழ் தேசியத்தின் அடிக்கூற்று
இதை மேலும் வலுப்படுத்தி, வளப்படுத்தியது இந்தி எதிர்ப்பு போராட்டம். 1930களில் தமிழறிஞர்கள் கூடி மொழி உரிமைக்காகப் போராடிம் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தனர். இதுதான் தமிழ் தேசியத்தின் அடிக்கூற்று.
முதன்முதலாக ஒடிசா மக்கள்தான் மொழிவாரியாக தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் எனக் கேட்டுப் போராடினர். 1936-ல் ஒடிசா மக்கள் தங்களுக்கான தனி மாநிலத்தைப் பெற்றார்கள். அது தமிழ்நாட்டுக்குப் புத்தெழுச்சியை ஊட்டியது.
திராவிட முன்னேற்றக் கழகம் தனியாக வந்தபிறகு, திராவிடம் என்று பெயர் வைத்திருந்தாலும் அந்தக் கட்சி தமிழ்த் தேசியத்தைத்தான் பேசியது. ம.பொ.சி, ஆதித்தனார் போன்றவர்கள் தமிழ்த் தேசியத்தைத் துல்லியமாக வரையறை செய்தனர். அதேபோல பெருஞ்சித்தரனார், தமிழ்ப்பாவாணர் எனப் பலர் அதை வளர்த்தார்கள். இன்று தமிழ்த் தேசியம் என்பது மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. இது இயல்புதான்.
தமிழ்த் தேசியத்தின் முழக்கம்
இந்தியைத் திணிக்கக் கூடாது. ஒருமைப்பாடு என்ற பெயரில் தேசிய இனங்களின் அடையாளத்தை, மொழியை, பண்பாட்டை, உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்பதே தமிழ்த் தேசியத்தின் முழக்கம். இதைக் குறுக்கீடு செய்வதைப் போன்று திராவிடம் போன்ற இனங்களைத் திணிப்பது தவறானது.
இவ்வாறு மணியரசன் தெரிவித்துள்ளார்.
திராவிடம் என்றால் என்ன?
திராவிடம் என்பது 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டில் உருவான சமூக மற்றும் அரசியல் இயக்கம். இந்த இயக்கம் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்ததுடன், எல்லோரும் சமம் என்ற கூற்றை முன்மொழிந்தது. திராவிடம் சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியதுடன் மொழி பண்பாட்டு மலர்ச்சியை ஏற்படுத்தியது. திராவிட இயக்கத்தின் முன்னோடியாக அயோத்தி தாசரைக் குறிப்பிடலாம். பின்னாட்களில் பெரியாரும் அண்ணாவும் கருணாநிதியும் திராவிடத்தை வளர்த்தனர்.
திராவிடம் குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் என்ன சொல்கிறார்?
திராவிடத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் எந்த முரண்பாடும் இல்லை. ஆரியத்துக்கு எதிராகவும் தமிழ், தமிழருக்கு ஆதரவாகவும் உருவான இயக்கமே திராவிட இயக்கம்.
திராவிடம் - பயன்பாடு
1885-லேயே திராவிட பாண்டியன் என்னும் இதழ் வெளிவந்திருக்கிறது. திராவிடம் என்ற சொல் 1892-ல் அயோத்திதாசப் பண்டிதர் ஓர் இயக்கத்துக்குச் சூட்டிய பெயர். இரட்டை மலை சீனிவாசன் அதைத் தொடர்ந்தார்.
1912ஆம் ஆண்டி தொடங்கப்பட்ட மெட்ராஸ் யுனைட்டட் லீக் என்னும் அமைப்பு, அடுத்த ஆண்டு திராவிடர் சங்கம் என மாற்றப்பட்டது. பார்ப்பனர் அல்லாதோர் சங்கம் என்று பெயர் வைக்க திட்டமிடப்பட்ட நிலையில், எதிர் நிலையில் பெயர் இருக்க வேண்டாம் என்பதற்காக, திராவிடர் சங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது.
திராவிட நாடு திராவிடருக்கே!
1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் வரையில், திராவிட நாடு திராவிடருக்கே என்று முழங்கிய பெரியார், பிறகு தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்னெடுத்தார்.
எல்லா விதத்திலும் தமிழுக்காக நின்ற இயக்கமே திராவிட இயக்கம். திராவிடம் என்ற சொல், சமூக தளத்தில் பண்பாட்டு கருத்தியலாக செயல்படுகிறது. ஒருகாலத்தில் திராவிடம் என்றால் மொழி, இனம், நாடு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது திராவிடம் என்பது ஒரு பண்பாட்டு தளத்தில் ஆரியத்துக்கு எதிராக இயங்கும் ஒரு கருத்தியல் என்று சுபவீ கூறுகிறார்.
மொத்தத்தில் தமிழ், தமிழர் உரிமை பேசும் தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிபெற்ற உருவமாக, தேவையான பிற கூறுகளையும் உள்ளடக்கியதே திராவிடம் எனலாம். மொழி உரிமையோடு, சாதி மறுப்பு, பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக நீதிக்கான போராட்டங்களை திராவிடம் முன்னெடுத்து வருகிறது.
நீர்த்துப் போன திராவிடக் கொள்கைகள்
அதே நேரத்தில் திராவிடக் கொள்கையியலாளர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு, ஒன்றிய அரசுடன் சமரசப் போக்கைக் கையாண்டதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதனால் திராவிடக் கொள்கைகள் நீர்த்துப் போனதாக தமிழ்த் தேசியவாதிகளில் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
திராவிடம் மற்றும் தமிழ் தேசியத்தின் கொள்கைகள் பெரும்பாலும் ஒருபோலவே தமிழர் நலன் சார்ந்து இருந்தாலும் வெகுஜன நீரோட்டத்தில் அதிகம் கலந்தது திராவிடம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.