DMK Rajyasabha Candidates | ராஜ்ய சபா உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இவர்கள்தான்..!
தி.மு.க.வின் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களாக ராஜேஸ்குமார் மற்றும் மருத்துவர் கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 4-ந் தேதி நடத்தப்படும் என்று ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், தி.மு.க. சார்பில் அந்த பதவியிடத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021 அக்டோபர் 4-ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவையின் இரண்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்களாக மருத்துவர் கனிமொழி என்.வி.என். சோமுவும், கே.ஆர்.என். ராஜேஸ்குமாரும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் மிகவும் முக்கியமான அவையாக விளங்குவது மாநிலங்களவை ஆகும். ராஜ்யசபா எனப்படும் என்று அழைக்கப்படும் இந்த அவையிலும் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்கள் சட்டமாக அமல்படுத்தப்பட முடியும். உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக இடங்கள் உள்ளது.
மாநிலங்களவையில் தமிழ்நாட்டிற்கு 18 இடங்கள் உள்ளது. அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றதால், அவர்களது பதவியிடங்கள் தானாகவே காலியானது. இதையடுத்து, தமிழ்நாட்டில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவியிடங்கள் காலியாகியது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 உறுப்பினர்கள் இடங்களுடன் சேர்த்து, மேற்கு வங்கம், அசாம், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 6 பதவிகளுக்கும் சேர்த்து வரும் அக்டோபர் 4-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை 15-ந் தேதி முதல் செப்டம்பர் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் மீதான மறுபரிசீலனை 23-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் வரும் 27-ந் தேதி ஆகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் அன்றைய தினம் மாலை 5 மணிக்கே அறிவிக்கப்பட உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜூன் மாதத்துடனும், கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடனும் நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநிலங்களவையில் காலியாக இருந்த ஒரு பதவிக்கு தி.மு.க.வின் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தற்போது தி.மு.க. சார்பில் 8 மாநிலங்களவை உறுப்பினர்களும், 5 அ.தி.மு.க. உறுப்பினர்களும், 1 பா.ம.க. உறுப்பினர்களும், ம.தி.மு.க.வின் 1 உறுப்பினரும், த.மா.க.வின் 1 உறுப்பினரும் பதவிவகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.